வலி.வடக்கில் விவசாய நடவடிக்கைக்காக விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடுகளை கட்ட முடியும் என அறிவிப்பு

05. யாழ்ப்பாணம் – வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியில் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் என விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளில் வீடுகளை கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஏற்கனவே வலி. வடக்கு மீள்குடியேற்றப் பகுதியில் பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் இராணுவத்தினரால் விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது ஜனாதிபதியே அனுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு அமைய விடுவிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்ட தனியார் காணிகளில் வீடுகள் தேவையெனின் கட்ட முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

அரசாங்க வீட்டுத் திட்டம் தேவையானவர்கள் உரிய நடைமுறைகளை பின்பற்றி பிரதேச செயலகத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியானவர்களுக்கு வீட்டுத் திட்டம் கிடைக்கும் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்