மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் பெட்ரோலிய ஆய்வுக்காக இலங்கை திறந்துவிட்டுள்ளது.
இதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான இலங்கை பெட்ரோலிய ஆய்வு உரிமம் வழங்கும் சுற்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மன்னார் படுகையில் உள்ள நான்கு ஆய்வுத் தொகுதிகள் சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
தற்போதுள்ள புவியியல் தரவுகளின் அடிப்படையில், மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பீப்பாய் பெட்ரோலியமும், 9 ட்ரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவும் இருக்கக்கூடும் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
இந்த உரிமம் வழங்கும் சுற்றின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வு தெமட்டகொடையில் உள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, கைத்தொழில் அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஆகியோர் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் தம்மிகா தந்திரிகோட, பணிப்பாளர் நாயகம் டாக்டர் நீல் டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மன்னார் படுகையில் இயற்கை எரிவாயுவும் திரவ ஹைட்ரோகார்பன்களும் இருப்பது முந்தைய ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார். இது அந்தப் பகுதியில் குறிப்பிடத்தக்க பெட்ரோலிய வளங்கள் இருக்கக்கூடிய சாத்தியத்தை வெளிப்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
எனினும், மன்னார் படுகையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இதுவரை விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நவீன புவியியல் ஆய்வு முறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இதுவரை ஆய்வு செய்யப்படாத பரந்த பகுதிகளை மேலும் ஆராய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுச் சுற்றில் பங்கேற்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு, பெட்ரோலிய அபிவிருத்தி அதிகார சபையிடம் தற்போது உள்ள மன்னார் படுகை தொடர்பான புவியியல் தரவுகளை அணுகுவதற்கும் அனுமதி வழங்கப்படும்.
இலங்கை தனது எரிசக்தித் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி செய்யும் பெட்ரோலியத்தின் மூலம் பூர்த்தி செய்து வரும் நிலையில், மன்னார் படுகையில் உள்ளதாக மதிப்பிடப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையக்கூடும்.
எனினும், இந்த வளங்களின் உண்மையான அளவு, அவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்த முடியுமா என்பது மற்றும் நாட்டின் எரிசக்தித் தேவைக்கு அவை எவ்வளவு பங்களிக்கக்கூடும் என்பவை மேலதிக ஆய்வுகள், மதிப்பீடுகள் மற்றும் வெற்றிகரமான அகழ்வுப் பணிகளுக்குப் பின்னரே உறுதி செய்யப்பட முடியும்.



