இந்த கோடையில் ஐரோப்பாவைத் தொடர்ச்சியான வெப்ப அலைகள் தாக்கியதைத் தொடர்ந்து, விளைச்சலில் கடுமையான சரிவு ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் உள்ள விவசாய உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த இழப்புகள் வரும் மாதங்களில் உணவுப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
மேற்கு ஐரோப்பாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வெப்பமான மாதங்களாக இருந்தன. மேலும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் வரை “ஐரோப்பாவின் பெரும்பகுதியைப் பாதிக்கும் வெப்ப அலைகளின் தொடர்ச்சியான அபாயம்” இருப்பதாகவும் அது எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய தானிய உற்பத்தியாளர்களில் ஒன்றான பிரான்சில், ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே நாட்டின் பெரும்பகுதியில் நிலத்தடி நீர் இருப்பு கடுமையாகக் குறைந்துவிட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள் ளது.
பிரிட்டனியில் உள்ள ஒரு முக்கிய விவசாயிகளின் கூட்டுறவு அமைப்பான பிரின்ஸ் டி பிரிட்டானி, இந்த கோடையில் பட்டாணி விளைச்சல் 40%, பிரக்கோலி விளைச் சல் 60%, மற்றும் கூனைப்பூ விளைச்சல் 50% முதல் 100% வரை குறையும் என்று அது கணித்துள்ளது.
இதற்கிடையில், குளிர்காலத்திற்கு முன்னதாக “தீவன உற்பத்திப் பற்றாக்குறை” அதிகரித்து வருவதாக கால்நடை வளர்ப்போர் எச்சரித்துள்ளனர். பிரான்சின் முட்டை உற்பத்தி மேம்பாட்டுக்கான தேசியக் குழு, வெப்ப அலைகளால் தினசரி உற்பத்தி சுமார் பத்து லட்சம் முட்டைகள் குறைந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது, அதே நேரத்தில் கோழிப் பண்ணைகளில் அதிக இறப்பு விகிதங்கள் பதிவாகியுள்ளன.
ஜெர்மன் விவசாயிகள் சங்கம் செவ்வாயன்று, தானிய உற்பத்தி கடந்த ஆண்டை விட 7%, அதாவது 33 லட்சம் டன்கள் குறைவாக இருக்கும் என்று எச்சரித்தது. நாட்டின் தென்பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுமையான பயிர்ச் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஐரோப்பிய வங்கிகளின் ஆய்வாளர்கள், இந்த வெப்ப அலைகளால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 50 பில்லியன் யூரோ முதல் 180 பில்லியன் யூரோ வரை இழப்பு ஏற்படக்கூடும் என மதிப்பிட்டுள்ளனர்.



