இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்த காலத்தில் இடம்பெற்ற கவலைக்குரிய யுத்தத்தின் மிகப் பெரும் பாதிப்புகளில் ஒன்றாகும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மீண்டும் ஒருபோதும் அவ்வாறான ஒரு யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுவதும், அவ்வாறான நிலைமைகள் உருவாகுவதற்கான காரணிகளை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற, நிகழ்வு ஒன்றில் விசேட உரையாற்றிய பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். “கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இன்று எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகும்.
சவால்கள், இடையூறுகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி, துணிச்சல், தன்னம்பிக்கை, திறமை மற்றும் விடாமுயற்சியால் முன்னேற்றம் அடைந்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை பாராட்டுக்குரியது” என்றும் பிரதமர் தெரிவித்தார்.



