யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில் ஆலய திருவிழாவில் அமைக்கப்பட்ட வாணவேடிக்கை நிகழ்வின் போது ஏற்பட்ட பாதிப்பில், 150க்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 21 பேர் தொடர்ந்தும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்தநிவைலயில், இந்தச் சம்பவம் தொடர்பாக வாணவேடிக்கை நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்த பொலிஸார், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து அவரை எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பொதுமக்களின் கண்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிக ஒளிச்செறிவுள்ள மின்குமிழ்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதேவேளை, பண்டிகை காலம் மற்றும் திருவிழாக்களின் போது அதிக பிரகாசமான விளக்குகள், பட்டாசுகள் மற்றும் லேசர் கதிர்கள் ஆகியவற்றினால் கண்களுக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் விசேட கண் மருத்துவ நிபுணர் எஸ்.மலரவன் அறிவுறுத்தியுள்ளார்.
LED மற்றும் அதிக பிரகாசமான விளக்குகளை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்க்குமாறும், அண்மையில் கண் அறுவைச் சிகிச்சை செய்தவர்கள் மற்றும் விழித்திரைப் பாதிப்பு உள்ளவர்கள் இவ்வாறான ஒளிரும் சூழல்களில் இருப்பதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், பார்வையில் மங்கல், கடும் கண் வலி அல்லது சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென்படின் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



