வங்கதேசத்தின் புதிய அதிபராக ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) மூத்த தலைவர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
வங்கதேச நாடாளுமன்றத்தில் 23-வது புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. மொத்தம் 349 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த இந்த தேர்தலில் 343 உறுப்பினர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த தேர்தலில் ஆளும் தரப்பில் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியின் வேட்பாளரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியுமான ஒலி அகமது ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் ஆலம்கீர் 255 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். ஒலி அகமது 88 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்ததாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உத்தீன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
வங்கதேசத்தின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள 78 வயதான ஆலம்கீர் இன்று (ஆகஸ்ட் 21) பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 35 ஆண்டுகளில் அந்நாட்டு தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. முன்னர் நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
வங்கதேசத்தில் கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகு போட்டியுடன் நடைபெற்ற முதல் அதிபர் தேர்தல் இதுவாகும். இதற்கு முன்பு கடந்த பல ஆண்டுகளாக அதிபர் பதவிக்கான தேர்தல்கள் பெரும்பாலும் போட்டியின்றி அல்லது ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.



