22ஆவது திருத்தத்திற்கு எதிரான மனு தாக்கல் செய்யப்பட்டமை ஆரம்பமே: பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் எச்சரிக்கை!

இலங்கை அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது ஒரு ஆரம்பம் மட்டுமே. எதிர்வரும் இரு வார காலத்துக்குள் எத்தனை மனுக்கள் சமர்ப்பிக்கப்படும் என்பதைத் தீர்மானிக்க முடியாது என ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

ஒருங்கிணைந்த கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் வெள்ளிக்கிழமை (20) ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முதல் 24 மணி நேரத்திற்குள் பல மனுக்கள் உயர்நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கு இன்னும் இரண்டு வார கால அவகாசம் உள்ள நிலையில், அந்த அவகாசம் முடியும் போது எத்தனை மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்பதைத் கணிப்பிட முடியாது.

உயர்நீதிமன்றததுக்கு இருக்கும் குறைந்த காலத்துக்குள் இந்த மனுக்களை விசாரித்து முடிப்பதற்கு நேரம் இருக்குமா என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. இதிலிருந்தே சமூகம் இந்த விவகாரத்தில் எவ்வளவு தீவிரமான கருத்து நிலையைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.
நாங்கள் சமர்ப்பித்துள்ள மனுவில் இரு தெளிவான நிலப்பாடுகளை உயர்நீதிமன்றத்துக்குச் சமர்ப்பித்துள்ளோம். முதலாவது விடயம், இது குறித்து உயர்நீதிமன்றம் மட்டுமே தனித்துத் தீர்மானம் எடுக்க முடியாது. ஏனெனில் இந்தத் திருத்தத்தின் விளைவாக உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதியரசர் உள்ளிட்ட நீதியரசர்களுக்குப் பெரிய நன்மை ஏற்படுகிறது.
எனவே, தமது வழக்கைத் தாமே விசாரிக்க முடியாது என்ற அடிப்படைச் சட்டக் கோட்பாடு நேரடியாகப் பாதிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் இறைமைக்கு மதிப்பளித்து, மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்பதே எமது நிலப்பாடாகும்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றியமைப்பதாக இருந்தால் கட்டாயமாக மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் உயர்நீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது. எனவே நாங்கள் முன்வைக்கும் சட்ட வாதங்களுக்குத் தெளிவான அடிப்படை உள்ளது.

அடுத்த விடயம், உயர்நீதிமன்றத்தில் தற்போது வழக்குகளை விசாரிக்கும் 13 நீதியரசர்களும் அடங்கிய முழுமையான நீதியரசர்கள் அமர்வு இந்த வழக்கினை விசாரிக்க வேண்டும் எனக் கோருகிறோம். சபாநாயகருக்கு அனுப்பப்படும் தீர்மானம் இவர்கள் அனைவரினதும் பங்களிப்புடன் எடுக்கப்படும் தீர்மானமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சில நீதியரசர்களை மட்டும் நியமிப்பதையோ அல்லது நீக்குவதையோ நாங்கள் முற்றாக எதிர்க்கிறோம்.

நாட்டில் இதுவரை இருந்த ஜனநாயகக் கலாச்சாரத்தை முற்றாக அழிக்கும் திட்டத்திலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிரான நமது போராட்டம் நீதிமன்றத்துடன் முடிந்துவிடாது. மருத்துவத் துறை, கல்வித் துறை, அரசுச் சேவை ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களை விழிப்புணர்வு செய்யும் முறைமையான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிப்பது சாதாரண விடயம் என யாராவது நினைத்தால் அது தவறானது. முன்னாள் தலைமை நீதியரசர் ஒருவர் இதனை நிறைவேற்றுத்துறை நீதித்துறைக்கு வழங்கும் ‘இலஞ்சம்’ எனக் பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் இலஞ்சம் வாங்கமாட்டார்கள் என்ற முழு நம்பிக்கையும் நமக்கு உள்ளது. ஆனால் தற்போதைய நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களைத் தம்வசம் ஈர்க்க அரசாங்கம் பெரும் முயற்சி செய்கிறது.

இதன் விளைவாக நீதித்துறை குறித்து சமூகத்தில் பிளவுபட்ட விவாதங்கள் உருவாகியுள்ளன. அரசியல் சார்ந்த நிறுவனங்கள் குறித்து வெவ்வேறு கருத்துகள் இருப்பது இயல்பு. ஆனால் நீதித்துறை உயரிய இடத்தில் இருக்க வேண்டும். அரசாங்கத்தின் இந்தத் தூரநோக்கற்ற நடவடிக்கையால் நீதித்துறைக்கு நீண்டகாலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சர்வதேச ரீதியிலும் இலங்கையைப் பாதிக்கும்.

நீதித்துறைச் சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அதிகாரி, ஜனாதிபதிக்க அனுப்பிய கடிதத்தில், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சர்வதேசத் தரத்திற்கு முரணானது என்பதால் இதைக் கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார். சர்வதேசக் கோரிக்கைகளை அலட்சியம் செய்தால் நாடு பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றார்.