பல்கலைக்கழக மாணவர்களிடையே போதை பொருள் பயன்பாடு அதிகரிப்பு !

பல்கலைக்கழகக் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டு விலகும் ஆண் மாணவர்களில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையானோர் ஏதேனும் ஒரு போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகப் பேராசிரியர் அமிள இசுரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட “ரட்டம எகட்ட” தேசிய வேலைத்திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக இளைஞர்களைப் போதைப்பொருளுக்கு அடிமையாக்குவதற்காகப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்கலைக்கழகங்களில் படிப்பைப் பூர்த்தி செய்யாமல் பாதியிலேயே வெளியேறும் ஆண் மாணவர்களைக் அவதானித்ததில், அவர்களில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையானவர்களிடம் போதைப்பொருள் அடிமைத்தனத்தின் அறிகுறிகள் தெளிவாகத் தென்படுகின்றன.

போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள் இன்பத்திற்காக மட்டும் அதைத் தொடர்வதில்லை; மாறாக, அதிலிருந்து விடுபட முயலும் போது உடலில் ஏற்படும் கடுமையான ‘வித்ட்ராயல்’ உபாதைகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே மீண்டும் மீண்டும் அதைப் பயன்படுத்தும் கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள்.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக அமைப்புகளுக்குள் நடத்தப்பட்ட ஆய்வுகள், இளைஞர்கள் மிகச் சிறிய வயதிலேயே போதைப்பொருட்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன.

எனவே, மாணவர்களை இலக்கு வைக்கும் போதைப்பொருள் வியாபாரிகளின் திட்டங்களை முறியடிக்கவும், இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுக்கவும் உடனடி மற்றும் வலுவான தடுப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.