இலங்கை சிறையிலுள்ள கடற்றொழிலாளர்களையும் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு கடற்றொழிலாளர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களுக்கு ஆதரவாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 30 ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து தங்கச்சிமடத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தையை நடாத்த வேண்டும் என்றும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.



