எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் யாழ். தந்தை செல்வா அரங்கில் இடம்பெறவுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச மாநாட்டுக்கு அனைத்து தரப்பினரும் அணிதிரண்டு பேராதரவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி இந்த அழைப்பு விடுத்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.
“இறுதி யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை தேடி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாத நிலையில் தேடிக் கொண்டிருக்கிறோம்.
எமது உறவுகளை தேடிய போராட்டத்தில் சர்வதேச நீதியை எதிர்பார்த்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஐ.நா வரை எமது நீதிக்கான போராட்டத்தை இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மீதான கொடூர இன அழிப்பு இடம்பெற்ற பின் தமக்கான நீதியை இலங்கை அரசிடம் பல தடவைகள் எழுத்து மூலமாக கோரியும் பதில் கிடைக்கவில்லை என்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
“12க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களை சந்தித்தோம். எந்தப் பயனும் இல்லாத நிலையில் கொலைகாரர்களிடம் எமக்கான நீதியை எதிர்பார்க்க முடியாது என்ற உண்மையை உணர்ந்தோம்”
“அதன் காரணமாக எமது உறவுகளைத் தேடிய போராட்டம் சர்வதேசத்தை நோக்கியதாக மாற்றப்பட்டு ஐ.நா 36ஆவது கூட்டத் தொடரில் இருந்து எமது உண்மைக்கும் நீதிக்குமான குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்ற உண்மையை சர்வதேசத்தின் வாயிலாக மனித உரிமைகளை மதிக்கின்ற நாடுகளூடாக எமக்கான நீதியை பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்” என்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி கூறியுள்ளார்.



