நயினாதீவுக்கு அருகில் பயணிகள் படகு விபத்து: விசாரணை ஆரம்பம்

யாழ். நெடுந்தீவு நோக்கிப் பயணித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்ன? என்பது தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.

இதேவேளை, நயினாதீவுக்கு அருகில் படகு விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்ட 10 பேரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த 10 பயணிகளைக் கொண்ட படகு, நயினாதீவு அருகே நேற்று முந்தினம் (16) மாலை விபத்துக்குள்ளானது.

இரண்டு பெண்கள் மற்றும் எட்டு ஆண்கள் பயணித்த குறித்த படகு விபத்துக்குள்ளானமை தொடர்பில் தகவல் கிடைத்த உடனேயே, இலங்கை கடற்படையினர், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு மக்களின் ஒத்துழைப்புடன் துரிதமாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, விபத்தில் சிக்கிய 10 பயணிகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட அனைவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக நயினாதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த படகு விபத்துக்குள்ளானமைக்கான காரணம் என்னவென்பது தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் விரிவான தகவல்களை கோரியுள்ளார்.

அத்துடன், படகில் பயணித்தவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அங்கிகள்‌ வழங்கப்பட்டிருந்தனவா, படகின் பாதுகாப்பு ஏற்பாடுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தனவா என்பன தொடர்பிலும் விசாரணை நடத்தி தகவல் தருமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடற்பயணங்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.