22ஆவது திருத்தச் சட்டம்: தீர்க்கமாக நகரும் அநுரவின் அரசு : விதுரன்

இலங்கையின் அரசியல் மற்றும் நீதித்துறை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் இடையிலான முரண் பாடு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை முறையே 63 இலிருந்து 65 ஆகவும், 65 இலிருந்து 67 ஆகவும் உயர்த்தும் வகையிலும், பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை வரையறுக்கும் உள்ளடக்கங்களுடனும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளமை, நாட்டின் சட்ட வல்லு நர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் பௌத்த மதபீடங்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பையும் ஆழ்ந்த கவலை யையும் ஏற்படுத்தியுள்ளது.
‘மாற்றம்’, ‘ஊழலற்ற ஆட்சி’ மற்றும் ‘சுயாதீனம்’ என்ற சுலோகங்களை முதன்மைப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றிய அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், பரந்தளவிலான கலந்தாலோசனைகளின்றி, தன்னிடம் உள்ள பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தை யும் நிறைவேற்று அதிகாரத்தையும் மட்டுமே நம்பி இத்தகையதொரு தீர்மானத்தை அவசர அவசரமாக எடுத்திருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொதுவாக, அரசியலமைப்புத் திருத்தம் போன்ற நாட்டின் அடிப்படைச் சட்டக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள், அனைத்து பங்குதாரர்கள், சட்ட வல்லு நர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்டகாலக் கலந்து ரையாடல்களுக்குப் பின்னரே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.
ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் மேற்படி ஜனநாயக நடைமுறைகளையே தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. நாட்டின் பிரதானப் பிரச்சினைகளான அதிகாரப்பகிர்வு, புதிய அரசியலமைப்பு உருவாக்கல் அல்லது மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து வலியுறுத்தப்படும்போதெல்லாம், ‘பரந்துபட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்’ என்ற பதிலையே வழங்கும் அரசாங்கம், இந்த 22ஆவது திருத்தத்தின் போது மட்டும் எந்தவொரு முன் கலந்தா லோசனைகளுமின்றி தன்னிச்சையாக வர்த்தமானி அறி வித்தலை வெளியிட்டிருக்கிறது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடனான சந்திப்பில் கருத்துவெளியிட்ட ஜனாதிபதி அநுரகுமார திசா நாயக்க, அன்றைய தினம் காலையில் சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டமை திறந்த மனதுடனான உரை யாடலுக்குத் தடையாக அமைந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், அரசாங்கம் சட்டத்தரணிகள் சங்கத்துடனோ அல்லது நீதித்துறை சார்ந்த ஏனைய அமைப்புகளுடனோ எவ்வித முதற்கட்ட உரையாடலையும் நடத்தாமல், நேரடியாக வர்த்தமானியில் திருத்தத்தை வெளியிட்ட பின்னரே பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது என்பதும், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதே உரையாடலை நடத்த முற்பட்டது என்பதும் இங்கு கவனிக் கத்தக்கது.
அதிகாரத்தின் மூலம் நகர்வுகளைத் தீர்மானித்து விட்டு, பின்னர் திறந்த மனதுடனான உரையாடல் பற்றிப் பேசுவது ஜனநாயகத்தின் உண்மையான பண்பாக முடியாது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறியாதவர் அல்லர். அதேநேரம் இத்திருத்தத்தின் சட்டபூர்வத் தன்மை மற்றும் அரசியலமைப்பு ரீதியான பாதிப்புகள் மிகவும் ஆழ மானவை. அரசியலமைப்பின் 3ஆம் பிரிவின்படி, இலங்கைக் குடியரசின் இறையாண்மை மக்களிடம் உரித்தாயிருப்பதுடன், 4(இ) பிரிவின் கீழ் மக்களின் நீதித்துறை அதிகாரம் அரசிய லமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்றங்கள் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஏ.வி.என் பெரோ எதிர் சட்டமா அதிபர் (இலக்கம் 30ஃ2022) வழக்கு மற்றும் 2022ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூல வழக்குகளில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின்படி, நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறையின் தலையீ டுகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட சுயாதீனமான நீதித்துறை இல்லையெனில், மக்களின் இறையாண்மைக்கோ அல்லது உரிமைகளுக்கோ எவ்வித அர்த்தமும் இல்லாமல் போய் விடும் என்பது தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக, பதவியிலிருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதிலோ அல்லது பதவிக்காலத்திலோ நேரடி அல்லது மறைமுகப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த வொரு அரசியலமைப்புத் திருத்தமும், நீதித்துறையின் சுயாதீனத்தைச் சிதைப்பதாக அமையும்.
இது மக்களிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்கும் செயலாகும் என்பதால், அரசியலமைப்பின் 3ஆம் பிரிவை நேரடியாக மீறுகிறது. எனவே, இத்தகைய திருத்தத்திற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மட்டும் போதாது; அரசியலமைப்பின் 85(1) ஆம் பிரிவின் பிரகாரம் இது கட்டாயமாக சர்வஜன வாக்கெடுப்பு மூலம் மக்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற சட்ட பூர்வமான கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
நீதிமன்ற நடத்தை பற்றிய சர்வதேச பெங்களூர் கோட்பாடுகள் (2002) மற்றும் சர்வதேச நீதித்துறை சுயாதீ னத் தரநிலைகளின்படி, நீதித்துறை என்பது உண்மை யிலேயே பக்கச்சார்பின்றி இயங்குவது மட்டுமன்றி, அது பக்கச்சார்பற்றதாக பொதுமக்களின் பார்வைக்கு புலப்படவும் வேண்டும். உண்மையான பக்கச்சார்பு நிலை நிரூபிக்கப் படாவிட்டாலும், நிறைவேற்றுத்துறை தனக்குச் சாதகமாகச் செயல்படக்கூடிய அல்லது குறிப்பிட்ட வழக்குகளைக் கையாளும் நீதிபதிகளுக்குச் சலுகை வழங்க முற்படுகிறது என்ற நியாயமான சந்தேகம் எழுந்தாலே, அது நீதித்துறை மீதான நம்பிக்கையை முழுமையாகத் தகர்த்துவிடுகிறது.
தற்போது உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு வழக்கு உட்பட பல முக்கிய அரசியல் மற்றும் குற்றவியல் வழக்குகள் தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளன. இத் தகைய உணர்வுபூர்வமான சூழலில், பதவியிலிருக்கும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த முனைவது, குறிப்பிட்ட நபர்களுக்குச் சலுகை வழங்கி அவர்களைத் தக்கவைக்கும் முயற்சியோ என்ற நியாயமான ஐயத்தைச் சமூகத்தில் தோற்றுவித்துள்ளது.
‘இது தனிநபர்களை மையமாகக் கொண்ட சலுகை அல்ல, மாறாக நீதிமன்றக் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சி’ என ஜனாதிபதி அநுரகுமார தன்னிலை விளக்கம் அளித்த போதிலும், கால நேரம் மற்றும் சூழல் சார்ந்த சந்தேகங்களை அரசாங்கத்தால் முழுமையாகத் துடைத்தெறிய முடியவில்லை.
அரசாங்கத்தின் இந்த தன்னிச்சையான போக்கிற்கு நாட்டின் உயர்மட்ட பௌத்த மதபீடங்களான முப்பீட மாநாயக்க தேரர்களும் தமது கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளனர். நாட்டின் நீதி நிர்வாகத்தின் சுயாதீனத்தில் தீவிரமான சந்தேகங்களை தோற்றுவிக்கக் கூடிய இத்திருத்தத்தைத் தவிர்க்குமாறு மகாநாயக்க தேரர் கள் கூட்டாக ஜனாதிபதியிடம் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியிருந்தனர். எனினும், அக்கடிதத்திற்கு அரசாங்கத்திடமிருந்து முறையான பதிலோ அல்லது குறைந்தபட்சம் கடிதம் கிடைத்தமைக்கான ஒப்புகையோ கூட வழங்கப்படவில்லை என மல்வத்து மகாநாயக்க திப்பொடுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் பகிரங்கமாகக் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதிக்கு அத்தகைய கடிதம் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று சில அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் பேசுவது தமக்கு வியப்பளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் தலைவர்களுக்கு மகா சங்கத்தினர் அறிவுரை வழங்குவது மன்னர்கள் காலம் தொட்டு வரும் பாரம்பரியம் என்ற நிலையில், அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்துவதும், பாராளுமன்றத்தில் மறைக்க முயல்வதும் வெளிப்படைத்தன்மையற்ற ஆட்சியின் வெளிப்பாடாகும். (அரசாட்சியில் மாநாயக்கர்களின் தலை
யீட்டை கட்டுரையாளர் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளவில்லை) ‘பொருத்தமற்ற சட்டங்களை இயற்றுவதன் மூலம் சமூகத்தில் அமைதியின்மையும், அரசு ஸ்திரமற்ற தன்மையும் ஏற்படுமானால், அத்தகைய நடவடிக்கை களிலிருந்து விலகி நிற்பதே தலைவரின் பொறுப்பு’ என்ற மாநாயக்க தேரர்களின் எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
மறுபுறம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமக்கே உரித்தான பாணியில் தமது நகர்வுகளை நியாயப்படுத்த முயல்கிறார். நீதித்துறை, புலனாய்வு அமைப்புகளில் நிலவும் கடுமையான ஆட்குறைபாடு, வழக்குகளின் தேக்கநிலை, கீழ் நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவைப் பலப்படுத்துதல் போன்ற பரந்த நிர்வாகச் சீர்திருத்தங்களின் ஒரு அங்கமாகவே இத்திருத்தத்தை அவர் சித்திரிக்கிறார்.
இலஞ்ச ஆணைக்குழுவின் கிளைகளை அதி கரிப்பது, பொலிஸ் சேவைக்கு புதிதாக 10,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வது, சட்டமா அதிபர் திணைக்களத்தை வலுப்படுத்துவது மற்றும் நீதிபதிகளின் நலன்களைப் பேணுவது போன்ற பல சாதகமான திட்டங்களை அவர் முன்வைத்த போதிலும், அவை அனைத்தும் சாதாரண நிர்வாக சீர்திருத்தங்களே தவிர, அரசியலமைப்பு ரீதியாக உயர்மட்ட நீதிபதிகளின் வயதை உயர்த்தும் உணர்வு பூர்வமான தீர்மானத்திற்கு முழுமையான நியாயாதிக்கமாக அமைய முடியாது.
‘சவால்களையும் உயிர் ஆபத்துக்களையும் எதிர் கொண்டேனும் மாற்றங்களைச் செய்யப் போவதாகவும், இந்த ஆபத்தான செயற்பாட்டினால் பதவி பறிபோகுமாயின் ஒதுங்கிச் செல்லத் தயார்’ என்றும் ஜனாதிபதி உணர்ச்சி பூர்வமாகப் பேசியிருப்பது, அவரது உறுதியான அரசியல் நிலைப்பாட்டைக் காட்டுகின்றது. ஆனால் ஜனநாயக நாட்டில் ‘நோக்கம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதனை அடையும் வழிமுறையும் சரியாக இருக்க வேண்டும்’ என்ற கோட்பாட்டை மறுதலித்து செயற்பட முடியாது என்பது மிகவும் முக்கியமானதொரு விடயமாகும். அதுமட்டுமன்றி, அவசியமான நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கும், அரசியலமைப்பு ரீதியான நீதித் துறைச் சுயாதீனச் சிதைவிற்கும் இடையிலான மெல்லிய வேறுபாட்டை அரசாங்கம் உணரத் தவறிவிட்டது.
ஐரோப்பிய ஆணைக்குழுவின் (வெனிஸ் ஆணைக்குழு) நல்லாட்சித் தரநிலைகளுக்கு முரணாக, அனைத்து பங்குதாரர்களையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள உரையாடல்களின்றி, அவசரகதியில் 22ஆவது திருத்தத்தைக் கொண்டுவர முயற்சிப்பது நாட்டின் சட்டத்தின் ஆட்சியைக் கடுமையாகப் பாதிக்கும்.
அரசாங்கம் தன்னிடம் உள்ள பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தை ஒரு அதிகார ஆயுதமாகப் பயன்படுத்தாமல், சட்டத்தரணிகள் சங்கம், நீதிபதிகள் சங்கம், சிவில் அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களின் நியாயமான அச்சங்களைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.
மக்களாட்சியின் பிரதான தூணான நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தமும், நீண்டகாலத்தில் நாட்டிற்குப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்.
எனவே, மக்களிடம் உள்ள இறையாண்மையை மதித்து, இத்திருத்தச் சட்டமூலத்தை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்துவதோ அல்லது தற்காலிகமாக நிறுத்திவைத்து, பரந்த கலந்தாலோசனைக்குப் பின்னரே அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதோ மட்டுமே தற்போதைய நெருக்கடிக்குச் சரியான ஜனநாயகத் தீர்வாக அமைய முடியும். ஆனால் இதில் எந்த முறைமையையும் பின்பற்றுவதற்கு அநுரவும் அவரது தோழர்களும் தற்போதைக்கு தயாரில்லை என்பது தான் துரதிஷ்டவசமானது.