செம்மணி படுகொலையை ஏற்க மறுக்கும் நீதி அமைச்சரின் நிலைப்பாட்டை சிறீதரன் சாடல்

தென்பகுதியில் நடந்த சூரியகந்த படுகொலையை ஏற்றுக்கொள்ளுகின்ற நீதி அமைச்சர் ஹர்சண நாணயக்கார, செம்மணியிலே நடந்திருப்பது ஒரு மனிதப் படுகொலை, மனிதப் பேரவலம் என்பதை ஏற்றுக்கொள்ளாத ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கருத்துரைப்பது துரதிர்ஷ்டவசமானது என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

சிவஞானம் சிறீதரன் நீதிமன்ற அனுமதியுடன் செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பல குழுக்கள் இங்கு இருந்திருக்கலாம் ஆனால், குழுக்கள் தங்களுக்குள் மோதி யாரையும் கொண்டுவந்து போட்டதாக நாங்கள் இதுவரை அறியவில்லை”.

“அவ்வாறான சம்பவங்களுக்கு அவர் ஒரு கதை வடிவம் கொடுக்க முனைவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

“நாட்டினுடைய நீதி அமைச்சர் மக்களை திசைதிருப்பும் வகையிலே இவ்வாறான வார்த்தைகளை உதிர்க்கக்கூடாது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றிய தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ்ப்பாண மண்ணிலே 95 ஆம் ஆண்டிலிருந்து 2001 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் காணாமல் போயும், கொல்லப்பட்டும் இருக்கிறார்கள் இதனை நாங்கள் சொல்லவில்லை.

இலங்கையினுடைய கிரிசாந்தி கொலை வழக்கிலே சாட்சியாக இருக்கிற சோமரத்ன ராஜபக்ச சொல்லியிருக்கிறார் இப்பொழுதும் சொல்லுகிறார்.

சோமரத்ன ராஜபக்சவை அரசாங்கம் அழைத்து வந்து, அவர் அடையாளப்படுத்துகின்ற இடங்களைக் தோண்ட வேண்டும் அப்பொழுதுதான் உண்மை வெளியிலே வரும்.

அந்த உண்மைகளை மறைப்பதற்கு எங்களிடம் இருந்த போராளிக் குழுக்களைப் பற்றியோ அல்லது இது ஒரு அனாமதேய விடயங்கள் போலவோ அதற்கான ஒரு சோடனைக் கதைகளைச் சொல்ல அமைச்சர் முன்வரக் கூடாது என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்
தெரிவித்துள்ளார்.