கடந்த வாரத்தில் 2008 முதல் 2011 வரை இந்தியாவின் சிறிலங்காவுக்கான பிரதித் தூதுவராகப் பணிப்பொறுப்பில் இருந்த விக்ரம் மிஸ்ரி அவர்கள் இந்திய வெளிவிவகாரச் செயலாளராக இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக வந்திருந்தார். அனைத்துலக அரசியல் பொருளாதார பாதுகாப்பு மாற்றங்களுக்கு முகங்கொடுப்பதற்கு ஒவ்வொரு நாடும் தனது கடல் வான் நிலப்பகுதிகளில் மற்றைய நாடுகளுடன் இணைப்புக்களை உருவாக்கி தங்கள் கூட்டாண்மை பங்காண்மை முயற்சியாக இவற்றை எதிர்கொள்ள முயற்சிப்பது சமகால அரசியல் போக்காக உள்ளது. இதன் பின்னணியில் இந்திய வெளிவிவகாரச் செயலாளரின் சிறிலங்காவுக்கான வருகை காலத்தின் தேவையாக இருந்தாலும் இந்த வருகை ஈழத்தமிழரின் இருப்பின் இறைமையை எவ்வாறு மாற்றும் என்பது ஈழத்தமிழரின் தாயகத்திலும் அனைத்து உலக வாழ்விடங்களிலும் ஈழத்தமிழரின் அக்கறையாக அமைவதும் தவிர்க்க இயலாதவொன்றாகவே உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் விக்ரம் மிஸ்ரி அவர்களும் ஈழத்தமிழர்களின் சிறிலங்காப் பாராளுமன்றப் பிரதிநிதிகளைச் சந்திப்பதையும் தனது வருகைக்கான திட்டத்தில் இணைத்துள்ளமை அமைந்தது.
மேலும் 2009 ஆம் ஆண்டு சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு நேரத்தில் இந்தியாவின் சிறிலங்காவுக்கான பிரதித் தூதுவராக இருந்தவர் விக்ரம் மிஸ்ரி தற்போது அவர் இந்திய வெளிவிவகாரச் செயலாளராக இலங்கைக்கு வருகை தந்த இக்காலகட்டத்தில் 1987 ஆகஸ்ட் 4 திகதியன்று ஈழத்தமிழர்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் பாதுகாப்பாக 1972 முதல் 15 ஆண்டுகள் இருந்த ஈழத்தமிழர்களின் ஆயுதங்களை சுதுமலையில் பெற்றுக் கொண்ட இந்தியா அன்றுமுதல் ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கான பொறுப்பையும் ஏற்றது என்ற வரலாற்று மாற்றத்தை இலக்கு மீள்நினைவு கூர விரும்புகின்றது.
இதனை தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தனது சுதுமலைப் பிரகடன உரையில் எவ்வாறு வெளிப்படுத்தினார் என்பதனை அவரது மொழியிலேயே இங்கு மீள்பதிவு செய்வது ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவுக்கு உள்ள வரலாற்றுப் பொறுப்பை உணர உதவும் என்பது இலக்கின் எண்ணம்.
“நாம் இந்த ஆயுதங்களை ஒப்படைக்கும் கணத்திலிருந்து எமது மக்களாகிய உங்களின் பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கின்றோம். ஈழத் தமிழர்களின் ஒரே பாதுகாப்பாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடமிருந்து பெற்றுக்கொள்வதன் மூலம் மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தையே குறிக்கிறது.
நாம் ஆயுதங்களைக் கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கியமான சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கின்றோம். இந்திய மக்களை நாம் நேசிக்கின்றோம். இந்திய வீரர்களுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடமிருந்து எம்மைப் பாதுகாக்கும் பொறுப்பை இந்திய இராணுவ வீரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நாம் ஆயுதங்களை அவர்களிடம் கையளிப்பதிலிருந்து ஒவ்வொரு ஈழத்தமிழனினதும் உயிருக்கும் பாதுகாப்புக்கும் இந்திய அரசே பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கு இடித்துக்கூற விரும்புகின்றேன். இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பு தருவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்கவில்லை. சிங்கள இனவாதப் பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு. தமிழீழ இலட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் நான் இங்கு திட்டவட்டமாக என் மக்களாகிய உங்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. எமது இலட்சியம் வெற்றிபெற வேண்டுமெனில் எமது மக்களாகிய உங்களின் ஏகோபித்த ஆதரவு என்றும் எமக்கு இருக்க வேண்டும். தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்குபெற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாக உங்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன்.” இதுவே தேசியத் தலைவரின் அன்றையச் செய்தி. ஆனால் இந்தியாவின் செயற்பாடு ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை எவ்வாறு 1987 முதல் 2009 வரை 22 ஆண்டுகள் இருந்தது என்பது உலக வரலாறாக உள்ளது.
கடந்த வாரத்தில் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் அவர்களது கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் சார்பாகச் சந்தித்தனர். அந் நேரத்தில் சிறிலங்கா அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தால் அதனுடன் சேர்க்கப்பட்ட மாகாணசபைகளுக்கான தேர்தலைச் சிறிலங்கா அரசாங்கம் விரைவில் நடத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கின்ற பழைய பல்லவியைக் கோஸ்டி கானமாக விக்ரம் மிஸ்ரியிடம் பாடி மகிழ்ந்தனர். கூடவே 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கின்ற வேண்டுகோளையும் மறுபடியும் முன்வைத்தனர். இதனை எவ்வாறு இந்தியா இன்றுள்ள உலக அரசியல் முறைமையுள் சிறிலங்காவுக்கு நிபந்தனைகளை விதித்து நடைமுறைப்படுத்தும் என்பதும் இன்றுள்ள ஈழத்தமிழரின் தேசிய பிரச்சினைக்கான தீர்வாக இது எவ்வாறு அமையும் என்பதும் இந்த ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் வெளிச்சம் என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
39 ஆண்டுகளுக்கு முன்பு கையொப்பமாகிய இந்திய சிறிலங்கா ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிறிலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் 14.11.1987ம் திகதி 13ஆவது திருத்தத்தால் நிதி என்னும் அரசியலமைப்பின் 17ஆவது பிரிவில் ‘அ’ பிரிவாகச் சேர்க்கப்பட்ட மாகாணசபைகைளைத் தாபித்தல் என்னும் பகுதியின் மூலம் அரசியலமைப்பாகக் கட்டமைக்கப்பட்ட மாகாணசபைகள் சிறிலங்கா தனது ஒன்பது மாகாணங்களுக்குமான நிதிப்பரவலாக்கத்தை செய்வதற்கும் அதனை சிறிலங்கா ஜனாதிபதியே தான் நியமிக்கும் ஆளுநர் மூலம் பாராளுமன்றத்தையும் கடந்து முன்னெடுப்பதற்குமான அதிகாரத்தை பாராளுமன்றம் சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரமுள்ள சிறிலங்கா ஜனாதிபதிக்கு வழங்குவதுமான அரசியலமைப்பு திருத்தமே தவிர அது ஈழத்தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கான எந்தவொரு மாற்றுத் தீர்வையும் முன்வைக்கவில்லை என்பது சிறிலங்காவின் அரசியலமைப்பால் தெளிவாக்கப்பட்டுள்ளது என்பதை இலக்கு ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் எடுத்துரைக்க விரும்புகிறது.
ஒருவேளை இன்று தனது படைபல ஆக்கிரமிப்பின் மூலம் ஈழத்தமிழரின் தாயகத்தை ஆக்கிரமித்துச் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தின் பாராளுமன்றக் கொடுங்கோன்மை மூலம் ஈழத்தமிழரின் அரசியல் பணிவைச் சிறிலங்கா பெறுகையில் ஈழத்தமிழர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணத்தையும் அதே சிறிலங்காவே பெறுவதால் தப்பிப்பிழைக்கும் பொறிமுறையில் அந்த வரிப்பணத்தைச் சிறிலங்காவிடமிருந்து பெற்று ஈழத்தமிழரின் நாளாந்த வாழ்வியல் பிரச்சினைகளுக்கு ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் பயன்படுத்த விரும்பின் அதனைத் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். மக்களுடைய தேவைகளும் வளங்களின் இருப்பும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் விபரங்களும் கல்வித் தேவைகள் வேலையில்லாதோரின் விவரங்கள் என்பன தொகுத்து வகுக்கப்பட்டிருந்தால் தான் வரிப்பணத்தை இதற்குச் செலவிடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைக்கலாம்.
எந்தவொரு ஈழத்தமிழ் அரசியல்வாதியாலும் ஈழத்தமிழர்களின் பொருளாதாரக் கொள்கைகள் ஈழத்தமிழரின் வெளியுறவுக் கொள்கைகள், ஈழத்தமிழரின் “இசட்” தலைமுறையினர் குறித்த புரிதல்கள் எதுவும் சான்றாதாரங்களுடன் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை. கடந்த காலத்தை நினைந்து புலம்புவதும் எதிர்காலத்தை நினைந்து ஏங்குவதுமான முறையிலேயே ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் செயற்பட்டு நிகழ்காலத்துக்கான பலத்தை உருவாக்க இயலாதுள்ளனர் என்பதே அரசியல் எதார்த்தம். இதற்கு ஈழத்தமிழர்களின் கருத்துருவாக்கிகளும் சமய இலக்கிய படைப்பாளர்களும் விதிவிலக்கல்ல. வரலாற்றை வரலாறாக நிகழ்வின் உண்மைத்தன்மையை உண்மைத்தன்மையாக வெளியிடாது சமூக ஊடகங்கள் உணர்ச்சியூட்டல் மற்றும் மகிழ்ச்சியூட்டல் வழி செய்திகளையும் ஆய்வுகளையும் முன்னெடுத்து தனிநபர் தாக்குதல் மேடையாக சமுக ஊடகங்களை வளர்க்கும் போக்கு உள்ளவரை ஈழத்தமிழரின் தேசிய ஒருமைப்பாடு என்பது நடைமுறைச் சாத்தியமற்றதாகவே தொடரும் என்பதை இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது. இதுவே பொதுநன்மையை (common goods) முன்னிலைப்படுத்தி வேறுபாடுகளுக்கு மத்தியில் தேச உருவாக்கம் (Nation Building Process) செய்ய இயலாத தேசஇனமாக ஈழத்தமிழினம் தடுமாறுகிறது. இதற்கு பலம் பொருந்திய வானலைகள் காணலைகள் உருவாகி இந்த சமுக ஊடகங்கள் ஏற்படுத்தும் இனத்துவச் சிதறலுக்கு எதிர்வினை செய்ய வேண்டிய தேவையுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு என்பது எல்லாரும் ஒற்றுமையாகும் நிலையல்ல. பொதுநன்மை ஒன்றில் மாறுபாடுகள் வேறுபாடுகள் மத்தியிலும் இணைவது. பிரித்தானியாவின் கடைசிப் பிரதமர் சேர். கியர் ஸ்டாமர் உக்ரேனின் பாதுகாப்பு ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு என்ற பொதுநன்மையில் பிரித்தானியா உறுப்பினர் நிலையில் இருந்து விலகிய ஐரோப்பிய ஒன்றியத்துடன் மாறுபாடுகள் வேறுபாடுகளுக்கு மத்தியிலும் ‘விருப்பில் இணையும் கூட்டினை” சமகால உலக அரசியல் முறைமையாகவே நடைமுறைப்படுத்தினார். இந்நிலையில் ஈழத்தமிழர்களின் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் ஈழத்தமிழர்களின் இருப்பை நிலைப்படுத்தல் என்ற பொதுவிருப்பில் கட்சிகள் அமைப்புக்கள் சிவில் சமூகத்தினர் கூட்டிணைந்து செயற்பட இலக்கு அழைக்கிறது.
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு தேசமாகவே 146000 ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பை அனுமதித்த இந்தியாவுக்கு 17 ஆண்டுகளின் பின்னர் 2026 இல் அதற்கான பரிகாரத்தைச் செய்வதற்கான சந்தர்ப்பமாக அன்று முள்ளிவாய்க்கால் சிறிலங்கா இனஅழிப்பின் கண்கண்ட சாட்சியாக இருந்த இன்றைய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்களிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றத்தால் நடைமுறைப்படுத்த முயலும் 2005-2019 காலத் தயாரிப்பான ஏக்கிய ராஜ்ஜிய அரசியலமைப்பு வரைவை தடுத்து நிறுத்தி இலங்கையின் ஒற்றையாட்சி முறையை ஒழித்து தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து அதன் தனித்துவமான இறையாண்மையை அடிப்படையாகக் கொண்ட கூட்டாட்சி அரசியலமைப்பை உருவாக்க இந்தியா உரிய செயற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனக் கோரியுள்ளார். இந்தியா இதனைச் செய்வதற்குத் தமிழக மக்களதும் மற்றைய மாநிலங்களின் மக்களதும் உலக மக்களதும் அழுத்தங்களை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பில் உலக ஈழத்தமிழினமும் உலகத் தமிழர்களும் உள்ளனர்.
ஆசிரியர்




