மட்டக்களப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐவர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.
2008 ம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை, பிள்ளையானின் கட்சி உறுப்பினர் உட்பட இருவர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை, வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கடத்தி கொடூரமாகக் கொலை செய்தமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்பாக ஏற்கனவே 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத், ஆகியோருக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று (04) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக் கொண்டபோது சந்தேக நபர்களான பிள்ளையான், இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகிய மூவரும் சிறைச்சாலைகளில் இருந்து இணையவழி காணொளி ஊடாக மன்றில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது பிள்ளையான் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரராஜா, பிள்ளையான் தற்போது வெலிசறை கடற்படை முகாம் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிறைச்சாலையில் இருந்து செல்லும் உணவை அந்த முகாமில் இருக்கும் இராணுவம் மற்றும் கடற்படையினர் பரிசோதனை செய்து அனுப்புவதால் அது சிதைவடைந்து செல்வதாகவும் தெரிவித்தார்.
அதனால் அவ்வாறான உணவை சாப்பிட முடியாமல் இருப்பதாகவும் அதனால் உணவை அவ்வாறு பரிசோதனை செய்யாது தருமாறும் சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரராஜா கோரினார்.
அத்துடன் 73 வயது கொண்ட பிள்ளையானின் தாயார் சுகயீனம் கொண்டவர் எனவும் அவருடன் கையடக்க தொலைபேசி ஊடாக 2 அல்லது 3 நிமிடம் கதைப்பதற்கு அனுமதிக்குமாறு கோரி சட்டத்தரணி வாதங்களை முன்வைத்தார்.
இந்த கோரிக்கைகளை நிராகரித்த நீதவான், சிறைச்சாலையில் எவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுமோ அதனை தொடர்ந்து பின்பற்றுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்பில் மன்றில் முன்னிலையான அதன் பொறுப்பதிகாரி, குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதால் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சந்தேகநபரை மாற்றுமாறு முன்வைத்த கோரிக்கை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதவான், பிள்ளையான் உட்பட 3 பேரையும் எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.



