மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சுமூக நிலை திரும்பியுள்ளதாக நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தைக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட போதிலும், மஹர சிறைச்சாலைச் சம்பவம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைச்சாலைகளுக்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளால் ஏற்பட்ட அதிருப்தியும் கோபமுமே இந்த அமைதியற்ற சூழ்நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அனைத்துச் சிறைச்சாலைகளுக்குள்ளும் போதைப்பொருள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த நாங்கள் சிறப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
அதன்பேரில் உள்ள வெறுப்பும் கோபமுமே இத்தகைய நிலைக்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.
முதற்கட்ட அறிக்கை கிடைத்த பின்னரே இது குறித்துத் துல்லியமாகக் கூற முடியும்” என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.
சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காகப் காவல்துறையினரும், காவல்துறை விசேட அதிரடிப் படையினரும் (STF) தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மோதலின் போது சேதமடைந்த சொத்துக்களைச் சீரமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைதிகள் அனைவரும் மீண்டும் அவர்களது சிறை அறைகளுக்குள் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் நீர் வழங்கப்பட்டுச் சிறைச்சாலையின் அன்றாட நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இச்சம்பவம் குறித்து முதற்கட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், இக்கலவரத்தின் போது கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதால் அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.



