இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குறியாக் கப்பட்டுள்ள ஆபத்தான சூழல் தோன்றியுள்ளது.
நாட்டில் மந்தகதியில் இயங்கிவரும் நீதித்துறைச் செயன்முறையினால் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவுபடுத்தவும், அனுபவமிக்க நீதிபதிகளின் சேவை யைப் பயன்படுத்தவும் என்ற போர்வையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு தற்போதைய அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாண யக்கார சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 107(1) ஆம் பிரிவில் திருத்தம் மேற்கொண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும் உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.
அதேபோன்று பிரதம நீதியரசரின் வயதெல் லையை 67 அல்லது அப்பதவிக்கு நியமிக்கப்பட்டு அதிக பட்சம் ஆறு ஆண்டுகள் என்று திருத்துவதற்கும் திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் வய தெல்லையை 61 இலிருந்து 63 ஆகவும், கீழ் நீதிமன்ற நீதிபதிகளான நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளின் வயதெல்லையை 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிப்பதற்கு ‘நீதிச்சேவை ஆணைக்குழு சட்டத்தை’ திருத்தவும் நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிப்படையில் பார்க்கின்றபோதும், தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு அணியான மக்கள் ஆணைக்கான சட்டத்தரணி குழுவினர் சுட்டிக்காட்டுவதுபோல குறித்த அரசியலமைப்பு திருத்தமானது நீதித்துறையை நவீன மயமாக்கும் சட்டச் சீர்திருத்தமாகத் தோன்றினாலும், அரசாங்கத்தின் இந்த நகர்வு தூரநோக்கற்றதும், ஜனநாயகக் கட்டமைப்பையும் சட்டத்தின் ஆட்சியையும் கடுமையாகப் பாதிக்கும் ஆபத்தான அரசியலமைப்பு சூழ்ச்சியாகும்.
அரசாங்கம் தனது தீர்மானத்தை நியாயப்படுத்து வதற்காக, உலக நாடுகளில் காணப்படும் நீதிபதிகளின் உயர் ஓய்வுபெறும் வயதெல்லையை முதன்மையான சான்றாகக் காண்பிப்பதற்கு முற்படுகிறது. அமைச்சரவை ஒப்புதலின் போது, அவுஸ்திரேலியா வில் 70, கனடா மற்றும் பிரேசிலில் 75, டென்மார்க்கில் 73, சுவீடனில் 69, சுவிட்சர்லாந்தில் 68, ஐஸ்லாந்து மற்றும் ஜப்பானில் 70 என்ற அடிப்படையில் ஓய்வுபெறும் வய தெல்லை காணப்படுவதாகவும், அமெரிக்க உயர் நீதிம ன்றத்தில் நீதிபதிகளுக்கு எவ்வித வயதெல்லையும் நிர்ண யிக்கப்படாமல் வாழ்நாள் நியமனமாக அளிக்கப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இருப்பினும், சர்வதேச அனுபவங்களையும் பிற நாடுகளின் சட்ட நடைமுறைகளையும் இலங்கையின் அரசியலமைப்புச் சூழலோடு நேரடியாக ஒப்பிட்டுப் பார்ப்பது முற்றிலும் பொருத்தமற்ற, தவறான வாதமாகும்.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா சுட்டிக்காட்டியது போல, அயல் நாடான இந்தியாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 62 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு 65 ஆகவும் இருக்கும் போது, இலங்கைத் தேவைகளுக்கு ஏற்ப மிகவும் புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்ட அரசியலமைப்பை விடுத்து, கலாசார மற்றும் அரசியல் ரீதியாக முற்றிலும் வேறுபட்ட மேற்கத்திய நாடுகளை உதாரணமாகக் கொண்டு வயதை உயர்த்த வேண்டிய அவசியமோ கட்டாயமோ இங்கு தற்போது எழவில்லை.
அத்துடன், உலகில் ஓய்வுபெறும் வயதெல்லை உயர்த்தப்பட்ட அல்லது சீரமைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் அனைத்தையும் கூர்ந்து அவதானித்தால், அவை அனைத் தும் முறையான, வெளிப்படைத்தன்மை கொண்ட, பல ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்ட பரந்த கலந்தாலோச னைகளின் பின்னரே மேற்கொள்ளப்பட்டுள் ளன என்பது தெளிவாகும்.
மாறாக, இலங்கையில் தற்போது முன்னெடுக்கப் படும் இந்த அவசரத் திருத்தமானது, நீதித்துறை, சட்டத்தரணிகள் சமூகம், கல்வியியலாளர்கள், சிவில் சமூகம் அல்லது ஏனைய பங்குதாரர்களுடன் எவ்வித விரிவான கலந்துரையாடல்களும் இன்றி தன்னிச்சையாகவும் அவசர அவசரமாகவும் முன்வைக்கப்பட்டுள்ளது.
நீதியமைச்சினால் சகல பங்குதாரர்களுடனும் நடத்தப்பட்ட விரிவான கலந்துரையாடல்களின் பின்னர் தயாரிக்கப்பட்ட ‘இலங்கையின் நீதித்துறை பற்றிய மதிப்பீடு மற்றும் மூலோபாய நடவடிக்கைத் திட்டம்: வணிக, ஒப்பந்த மற்றும் முதலீட்டுச் சட்டங்களை நடைமுறைப்படுத்தல்’ என்ற ஆவணத்தில் கூட, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது முக்கிய கட்டமைப்புச் சீர்திருத்தமாக பரிந்துரைக்கப்பட்டிருக்கவில்லை .
இவ்வாறிருக்க, எந்தவொரு பொதுக்கோரிக்கையோ அல்லது கட்டமைப்பு ரீதியான நியாயப்படுத்தலோ இன்றி, அவசர அவசரமாக வயதெல்லையை அதிகரிக்கும் யோச னையை அமைச்சரவையில் நிறைவேற்றியிருப்பது அரசாங் கத்தின் அரசியல் உள்நோக்கத்தையே வெளிச் சம்போட்டுக் காட்டுகிறது.
இந்த ஓய்வுபெறும் வயதெல்லை அதிகரிப்பானது, தற்போதைய பிரதம நீதியரசர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு சலுகை வழங்கும் நோக்கிலும், ஓய்வுபெறும் தருவாயில் இருக்கும் தமக்கு சாதகமான நீதிபதிகளுக்கு வழங்கப்படும் ‘மறைமுக இலஞ்சம’ போலவே செயற்படும் என்ற பலத்த சந்தேகம் சமூகத்தில் காணப்படுகின்றது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச்சபைக் கூட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஏகமனதாக இந்தத் தீர்மானத்தை முற்றாக நிராகரித்துள்ளதுடன், இது குறிப்பிட்ட சில நீதிபதிகளை இலக்குவைத்து மேற்கொள் ளப்படும் நடவடிக்கை எனச் சாடியுள்ளனர். அத்துடன், பொதுநலவாயச் சட்டத்தரணிகள் சங்கமும் இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக் கையில், அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை இவ் வாறான அவசரமான அல்லது தற்காலிக முறையில் கொண்டுவருவது அரசியலமைப்பின் புனிதத்தைக் குறைத்துவிடும் என்றும், இது நீதித்துறையின் சுயாதீனத்தில் பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் கடுமையாகச் சீர்குலைக்கும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
லற்றிமர் ஹவுஸ் கொள்கைகள் (Latimer house Principles) மற்றும் கோவா பிரகடனம் 2023 ஆகியவற்றின் படி, நீதித்துறையின் சுயாதீனத்தையும் நடுநிலைமையையும் பாதுகாப்பது அரசாங்கங்களின் தலையாய கடமையாகும்.
வழக்குகளின் தேக்க நிலையைக் குறைப்பதே தமது நோக்கம் என்று அரசாங்கம் கூறுவது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதவொரு ஏமாற்று வாதமாகும். வயது கூடும்போது மனித இயல்புக்கும் உடலியல் திறனுக்கும் ஏற்ப செயற்றிறன் குறையுமே தவிர அதிகரிக் காது. ஓய்வுபெறும் வயதில் அனுபவமிக்கவர்கள் விலகும் போதுதான் திறமையான, சுறுசுறுப்பான இளைஞர்கள் நீதித்துறைப் பதவிக்கு வர முடியும்.
உண்மையிலேயே வழக்குகளை விரைவுபடுத்த அரசாங்கம் விரும்பியிருந்தால், உயர் நீதிமன்றங்களில் கடந்த பல மாதங்களாக வெற்றிடமாக உள்ள எட்டு நீதியரசர் பதவிகளை உடனடியாக நிரப்பியிருக்க வேண்டும்.
மேல் நீதிமன்றங்களில் இருக்க வேண்டிய 110 நீதிபதிகளில் 93 பேர் மட்டுமே உள்ள நிலையில், அவ் வெற்றிடங்களை அரசியலமைப்புக்கு அமைவாக விரைவாக நிரப்பாமல், பதவியில் இருக்கும் நீதிபதிகளின் வயதை நீடிப்பது கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளையும் கடுமையாகப் பாதிக்கும்.
அதனைவிடவும் மிகவும் ஆபத்தான விடயம் யாதெனில், வயதெல்லை அதிகரிப்பு சட்டமூலம் வர்த்த மானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் அந்த அரசியல மைப்புத் திருத்தத்தை ஒருவர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தினால், நீதிபதிகள் தங்களின் சொந்த ஓய்வுபெறும் வயதெல்லையைத் தாமே தீர்மானிக்க வேண்டிய ஒரு பாரதூரமான முரண்நிலை விருப்புக்கு (Conflict of Interest) தள்ளப்படுவார்கள்.
வழக்கை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தமது எதிர்காலத்துக்கு பலனளிக்கக்கூடிய விடயத்தில்; எவ்வாறு பக்கசார்பின்றி தீர்ப்பளிக்க முடியும் என்ற வினா எழுவதுடன், அது ஒட்டுமொத்த நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கே பேராபத்தாபத்தானதாக முடியும்.
சர்வஜன வாக்கெடுப்பு இன்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டு அரசாங்கம் வயதெல்லை அதிகரிக்கும் சட்டமூலத்தை நிறைவேற்ற முனைவது, ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது.
தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற் காகவும், தனது ஆட்சிக்கெதிரான தீர்ப்புகளைத் தடுப் பதற்காகவும் பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் இப்திகார் சவுத்ரியைப் பதவியிலிருந்து நீக்கி, நீதித்துறையைக் முடக்க முயன்றார்.
இதன் விளைவாக, நாடு தழுவிய அளவில் வழக் கறிஞர்களும், சிவில் சமூகமும், பொதுமக்களும் வீதிக்கு இறங்கி மிகப்பெரிய ‘நீதிபதிகள் பாதுகாப்புப் போராட்டத்தை’ முன்னெடுத்தனர். இப்போராட்டத்தின் எழுச்சியே இறுதியில் முஷாரப்பின் சர்வாதிகார ஆட்சி வீழ்வதற்கும், அவர் நாட்டை விட்டுத் தப்பியோடுவதற்கும் முதன்மையான காரணமாக அமைந்தது.
இலங்கையிலும்கூட, கடந்த காலத்தில் மூன்றாவது முறையும் ஆட்சியில் நீடிப்பதற்காகவும், நீதித்துறை உட்பட சுயாதீன ஆணைக்குழுக்களை தன் கைக்குள் வைப்பதற்காகவும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் 18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்தது.
நீதித்துறையின் சுயாதீனத்தைக் கேள்விக்குள்ளாக்கிய இந்த அதிகாரம் சார்ந்த மமதையே, மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு அலையை உருவாக்கி 2015 இல் அவரது ஆட்சி வீழ் வதற்கு வழிவகுத்தது. இவ்வாறு, தலைவர்கள் தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக தெரிவு செய்து தோல்வி யடைந்த வழியையே அநுர அரசாங்கமும் தற்போது தெரிவு செய்திருக்கின்றது. அந்த பயணம் ஆட்சி அதிகாரத்துக்கே மிகவும் ஆபத்தானது.
ஆகவே, நீதித்துறையின் சுயாதீனத்தையும் பொது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பாதுகாக்கும் பொருட்டு, அரசாங்கம் தனது தூரநோக்கற்ற வயதெல்லை அதிகரிப்பு முன்மொழிவைக் கைவிட்டு, பரந்த கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் வெற்றிடங்களை நிரப்பும் ஜனநாயக வழிமுறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக, உயர் நீதிமன்றத்தில் நிலவும் 8 நீதியர சர் வெற்றிடங்களையும், மேல் நீதிமன்றத்தில் உள்ள வெற்றி டங்களையும் அரசியலமைப்புக்கு அமைவாக எவ்வித தாமதமுமின்றி உடனடியாக நிரப்ப வேண்டும்.
கீழ் நிலை நீதிமன்றங்களுக்கு (மாவட்ட நீதி மன்றங்கள் மற்றும் நீதிவான் நீதிமன்றங்கள்) புதிய நீதிபதிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டும்.
‘இலங்கையின் நீதித்துறை பற்றிய மதிப்பீடு மற்றும் மூலோபாய நடவடிக்கைத் திட்டம்’ ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு, வணிக, ஒப்பந்த மற்றும் முதலீட்டுச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பிரத்தியேக நீதிமன்றங்களையும், கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும்.
நீதிமன்றங்களுக்குத் தேவையான போதிய பௌ திக வளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
வழக்குகளைத் தாக்கல் செய்தல், ஆவணங்களைப் பரிமாறுதல் மற்றும் கட்டளைகளைப் பிறப்பித்தல் போன்ற நடைமுறைகளை கணினிமயமாக்கி இணையவழி நீதி மன்ற முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும்.
சாட்சியப் பதிவுகள் மற்றும் சிறிய அளவிலான விசாரணை நடைமுறைகளுக்கு காணொளி மாநாட்டு (Video Conferencing) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்.
சிவில் மற்றும் வணிக ரீதியான தகராறுகளை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக்கொள்ளும் மத்தியஸ்தம் (Mediation) மற்றும் நடுவர் மன்ற (Arbitration) முறைகளை ஊக்குவிக்க வேண்டும். இது ஆரம்ப நீதிமன்றங்களின் சுமையைப் பெருமளவில் குறைக்கும்.
வழக்குகளுக்குத் தேவையின்றி தவணைகள் வழங்கப்படுவதைக் கட்டுப்படுத்தி, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வழக்குகளை முடிப்பதற்கான ‘வழக்கு மேலா ண்மை அமைப்புகளை’ (Case Management System) கட்டா யமாக்க வேண்டும்.
இதற்கும் அப்பால் நீதித்துறையின் சுயாதீனம், நீதிபதிகளின் பதவிக்காலம் அல்லது சட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வரும் போது, இலங்கை சட்டத் தரணிகள் சங்கம், நீதித்துறை ஆணைக்குழு, சிவில் சமூகம் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் வெளிப்படையான கலந்தாலோசனைகளை நடத்தி பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இவை எதனையுமே செய்யாது வெறுமனே வயதெல்லையை மாற்றும் அநுர அரசாங்கத்தின் முயற்சி யானது, நீதித்துறையை நிறைவேற்று துறையால் கட்டுப் படுத்தும் போக்கின் வெளிப்பாடாகும்.
நீதித்துறை என்பது அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் ஓர் அரசியல் உபகரணம் அல்ல. மக்கள் நீதித்துறை மீது வைத்துள்ள இறுதி நம்பிக் கையையும் சிதைத்துவிடும். அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும் பான்மை என்ற பலத்தின் மீதான இறுமாப்பைக் கைவிட்டு, இந்தத் தூரநோக்கற்ற அரசியலமைப்புத் திருத்தத்தைக் உடனடியாகக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், சட்டத்தின் ஆட்சி யைச் சீர்குலைத்த அரசாங்கமாக வரலாற்றுப் பழியைச் சுமப்பதோடு, நீதித்துறையின் சுயாதீனத்திற்காகப் போராடும் மக்கள் சக்தியால் ஆட்சியின் இருப்பையே இழக்க நேரிடும் என்பதே வரலாறு உணர்த்தும் எச்சரிக்கையாகும்.



