சீனாவின் மிகப்பெரிய மெமரி-சிப் (memory-chip) தயாரிப்பு நிறுவனமான ChangXin Memory Technologies (CXMT), பங்குச் சந்தையில் அறிமுகமான உடனேயே அதன் பங்குகள் ஐந்து மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்ததைத் தொடர்ந்து, சீனாவின் மிக மதிப்பு மிக்க பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறியுள்ளது.
திங்களன்று(27) நடைபெற்ற இந்த ஆண்டின் ஆசியாவின் மிகப்பெரிய பொதுப் பங்கு வெளியீட்டில் (IPO) இந்நிறுவனம் 57.9 பில்லியன் யுவான் (8.6 பில்லியன் டாலர்) நிதியைத் திரட்டியது. ஷாங்காய் பங்குச் சந்தை வர்த்தகத்தில் அதன் பங்குகள் 466% உயர்ந்தன, இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 3.3 டிரில்லியன் யுவானாக அதிகரித்தது.
2016-ல் நிறுவப்பட்ட CXMT, ஸ்மார்ட்போன்கள், தனிநபர் கணினிகள், சர்வர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகள் மற்றும் ராணுவ உபகரணங்களில் பயன் படுத்தப்படும் ‘டைனமிக் ரேண்டம்-அக்சஸ் மெமரி’ (DRAM) சிப்களைத் தயாரிப்பதில் சீனாவின் முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தற்போது உலகளாவிய DRAM சந்தையில் சுமார் 8% பங்கை இந்நிறுவனம் கொண்டுள்ளது; இதன் மூலம் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், எஸ்கே ஹைனிக்ஸ் (SK Hynix) மற்றும் மைக்ரான் (Micron) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது பெரிய உற்பத்தியாளராக இது திகழ்கிறது.
சீனாவின் குறைக்கடத்தி (semiconductor) துறை யின் வளர்ச்சியைத் தடுக்க அமெரிக்கா பல ஆண்டுக ளாக முயற்சித்து வருகிறது. 2022 முதல், மேம்பட்ட சிப் தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீது வாஷிங்டன் விரிவான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது; நவீன குறைக்கடத்திகளைத் தயாரிக்கும் சீனாவின் திறனைக் குறிவைக்கும் வகையில் 2024-ன் பிற்பகுதியில் இக்கட்டுப்பாடுகள் மேலும் விரிவாக்கப் பட்டன.
AI மற்றும் ராணுவத் தேவைகளுக்குப் பயன்படும் அதிநவீன சிப்களைத் தயாரிக்கத் தேவையான கருவிகள் சீனாவிற்குக் கிடைப்பதைக் கட்டுப்படுத்துவதே இம்நட வடிக்கைகளின் நோக்கமாகும்.
தொழில்நுட்பத் துறையில் முன்னிலை வகிப் பதற்கான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான போட்டி யில் குறைக்கடத்திகள் ஒரு முக்கிய களமாக மாறியுள்ளன.



