யாழ்ப்பாணம் – வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வயாவிளான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வயாவிளான் சந்தியில் நேற்று (02) காலை குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் யாழ். மாவட்ட கட்டளை தளபதிக்கு தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மகஜரும் கையளித்துள்ளனர்.
வலி.வடக்கில் இருந்து 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியேற்றப்பட்ட மக்கள் 36 வருடங்கள் கடந்தும், அவர்களின் சொந்த இடங்களுக்கு மீள திரும்ப அனுமதிக்கப்படவில்லை.
குறித்த பகுதிகள் இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் தமது சொந்த காணிகளுக்கு திரும்ப முடியாத நிலையில், வாடகை வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்களாக தம்மை தமது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்குமாறு கோரி போராடி வரும் நிலையில் வலி. வடக்கை சேர்ந்த மூன்று கிராம மக்கள் தமது காணிகளை விடுக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அந்த வகையில், மயிலிட்டி கிராம மக்கள் பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் பலாலி மக்கள் பிரதி ஞாயிற்றுகிழமைகளிலும் போராடி வரும் நிலையில் இன்றைய தினம் (02) முதல் வயாவிளான் மக்களும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
போராட்டத்தின் முடிவில், வயாவிளான் பகுதியில் உள்ள இராணுவத்தினர் ஊடாக யாழ். மாவட்ட கட்டளை தளபதிக்கு தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
அத்துடன் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மதியம் வரையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.



