மஹர சிறையில் பதற்றம் : நால்வர் காயம்

கம்பஹா – மஹர சிறைச்சாலைக்குள் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குள் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அமைதியற்ற சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சிறைச்சாலையின் ஆவண காப்பகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, காயமடைந்த கைதிகள் 4 பேர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக காவல்துறை மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு பல காவல்துறை குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கேள்வியுற்றதையடுத்து மஹர சிறைச்சாலையிலுள்ள கைதிகளின் உறவினர்கள் சிலர் சிறைச்சாலை வளாகத்துக்கு சென்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.