யாழ்ப்பாணம் – தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் திஸ்ஸ விகாரைக்கு எதிராக இடம்பெறும் மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று (29) தீவிரமாகத் தொடர்ந்து இடம்பெற்றது.
குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் மாலையும், பௌர்ணமி தினத்தன்று காலையிலிருந்து மாலை வரையும் தொடர் போராட்டங்களை நடத்துவது வழக்கமாகும்.
அந்த வகையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் நேற்று (28) ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், “தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்று”, “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்”, மற்றும் “கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை உடனே நிறுத்து” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், கட்சிப் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்ட நிலையில், இன்றும் போராட்டம் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காணிகள் மீட்கப்படும் வரை தங்களது அறவழிப் போராட்டம் ஓய்வடையாது எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ள நிலையில், அந்த பகுதியில் பாதுகாப்பு அமைச்சு சார்ந்த கண்காணிப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது



