இரகசியமாக அரசியலமைப்பை திருத்தும் செயற்பாடு இடம்பெறுவதாக தகவல்

நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் நோக்கில் இரகசியமான முறையில் அரசியலமைப்பை திருத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையானவை என்றால், அது நாட்டின் நீதித்துறை சுயாதீனத்திற்கும் ஜனநாயக ஆட்சிமுறைக்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் வெளிப்படைத்தன்மை, பொது கலந்துரையாடல் மற்றும் சட்டபூர்வ நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, நீதித்துறையின் சுயாதீனத்துடன் தொடர்புடைய விடயங்களில் இரகசியமாக அல்லது போதிய ஆலோசனையின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது சட்டத்தின் ஆட்சியின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதித்துறையின் சுயாதீனத்தையும் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளையும் பாதுகாப்பது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என்றும், இரகசியமான அரசியலமைப்பு திருத்தங்கள் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதி அரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை நீதித்துறை சேவை சங்கம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த வயது அதிகரிப்பு நீதித்துறையின் சுதந்திரத்தையும் ஸ்திரத்தன்மையையும் பாதிக்கும் என்று அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையையும் மரியாதையையும் பாதுகாப்பதற்காக, எந்தவித திருத்தங்களையும் மேற்கொள்ளாமல் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதித்துறை சேவை சங்கத்தின் பொதுக்கூட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து, ஜனாதிபதிக்கும் இது குறித்து எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.