இலங்கையர்கள் இருவர் தமிழகத்தில் கைது

தனுஷ்கோடி கடல் வழியாகத் தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக  சென்ற, குற்றப் பின்னணி கொண்ட இலங்கையர்கள் இருவரை இராமேஸ்வரம் கடலோரக் காவல் குழும (மரைன்) காவல்துறையினர்  கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைக்கு நேற்று (24) அதிகாலை இலங்கையிலிருந்து சட்டவிரோதமாகப் படகு ஒன்றில் இருவர் வந்து இறங்கியதாக ராமேஸ்வரம் மரைன்  காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இலங்கை வட்டாலை பகுதியைச் சேர்ந்த லூஸிநந்த் (30) மற்றும் கம்பஹா பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (31) என்பது தெரியவந்துள்ளது.

மேலும், இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (23) இரவு மன்னார் பேசாலை கடற்கரையிலிருந்து ரூ.3 லட்சம் பணம் கொடுத்துப் படகில் புறப்பட்டு, நேற்று (24) அதிகாலை சுமார் 4 மணியளவில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையை வந்தடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவர்குறித்து மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் இலங்கையில் உள்ள அதிகாரிகளைத் தொடர்புகொண்டு விசாரித்தனர். அதில், இவர்கள் இருவர் மீதும் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine), ஹெராயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் மற்றும் கொலை, கொள்ளை போன்ற பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.