கறுப்பு ஜூலை : ஐக்கிய தேசியக் கட்சியை சாடிய சந்திரசேகர்!

தமிழர்களுக்கான உரிமைகளை மறுத்து, யாழ். நூலகம் மீது தனது அரசியல் பழிவாங்கலை காட்டிய, அரசியல் நாசகார வேலைகளை முன்னெடுத்த ஐக்கிய தேசிய கட்சியின் பின்னால் இன்று தமிழர்களுக்கான உரிமை என்ற போலி முகத்திரையில் பலர் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றில் கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

“அப்போதைய மகாவலி அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்க, தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுத்து, நாசகார அரசியலை மேற்கொண்ட ஒரு அரசியல்வாதி.

பதுளை நகரம் எரிக்கப்பட்டபோது, அப்போதைய இராணுவத்தினர் கடைகளை அடையாளமிட்டு சென்ற பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த விஷமிகள் அந்தக் கடைகளுக்கு தீ வைத்தனர்.

அங்கிருந்த பச்சிளம் குழந்தைகள் கூட தீயில் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் செயல்களை மேற்கொண்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே” என்று அமைச்சர் சந்திரசேகர் கடுமையாக சாடினார்.

“அது மட்டுமல்லாமல், தோட்டத் தொழிலாளர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து, அந்த நாசகாரச் செயல்களையும் மேற்கொண்டவர்கள் அதே ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களே.

அதன் பின்னர், 1979 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் கொண்டு வந்து, தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட அடக்குமுறைகளை முன்னெடுத்தனர்.

மேலும், வடக்கு – கிழக்கில் நடைபெறவிருந்த தேர்தலை ஒத்திவைத்து, ஜனநாயகச் செயல்முறையை பாதிக்கும் வகையில் மிகவும் கொடூரமான அரசியலை முன்னெடுத்தனர்.

அதன் பின்னர், தொடர்ச்சியாக யாழ்ப்பாணப் பொது நூலகத்தை எரித்து, தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் செயல்களிலும் ஈடுபட்டனர்” என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

“முதலில் யாழ்ப்பாணத்தில் தேர்தல் மோசடிகளை முன்னெடுத்தனர். பின்னர் யாழ்ப்பாணப் பொது நூலகத்தை எரித்தனர். இவ்வாறான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் செல்லும் அரசியல்வாதிகள் இன்று மார்தட்டி அரசியல் பேசுகின்றனர்” என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.