தித்வா புயலைத் தொடர்ந்து 30,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவு அபாயத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், முன்னர் பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட பகுதிகள்கூட தற்போது அபாயகரமானவையாக மாறியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) எச்சரித்துள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, புயலால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் நிலச்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் ஏற்கனவே தென்பட்டுள்ளதாக NBRO சிரேஷ்ட விஞ்ஞானி டாக்டர் வசந்த சேனாதீரா தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவு ஏற்படாதபோதிலும், ஏற்கனவே மண் மற்றும் பாறைகள் நகர்ந்துள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என அவர் கூறியுள்ளார்.
டாக்டர் சேனாதீராவின் கூற்றுப்படி, கடந்த 15 ஆண்டுகளில் நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட சுமார் 15,000 குடும்பங்களுடன், தித்வா புயல் தொடர்பான பாதிப்புகளைத் தொடர்ந்து மேலும் 16,793 குடும்பங்கள் அதிக அபாயம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட குடும்பங்களில் சுமார் 5,000 குடும்பங்கள் தற்போது மீள்குடியேற்றப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
“புயலுக்குப் பின்னர், நாம் பாதுகாப்பானவை எனக் கருதிய இடங்கள்கூட தற்போது பாதுகாப்பற்றவையாக மாறியுள்ளன” எனத் தெரிவித்த டாக்டர் சேனாதீரா, நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் கனமழை பெய்யும் சந்தர்ப்பங்களில் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளார்.
நிலச்சரிவுகளை வேடிக்கை பார்ப்பதற்காகவோ அல்லது அவற்றைப் பதிவு செய்வதற்காகவோ நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், அவ்வாறு செய்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
அரச நிறுவனங்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும், சமூக ஊடகங்களில் பரவும் சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்குமாறும் டாக்டர் சேனாதீரா பொதுமக்களை மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.



