முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் கொலையா, தற்கொலையா என்பது உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அரச இரசாயன பகுப்பாய்வின் பின்னரே முடிவாகும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த மரணம் தொடர்பில் தற்போது தீவிரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
குறிப்பாக, அவரது மெய்ப்பாதுகாவலர், மனைவி, மகன் உள்ளிட்ட நெருக்கமானவர்களிடத்தில் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. அத்துடன் துப்பாக்கிப் பிரயோகத்தின் மூலம் அவர் உயிரிழந்துள்ளார் என்பது திறந்த நீதவான் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மரணமடைந்த இடத்தில் மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறான நிலையில் அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து தற்போது கூற முடியாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அரச இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளிவந்த பின்னரே இறுதியான தீர்மானத்துக்கு வரமுடியும் என்றும் அவர் கூறினார் எனினும், முன்னாள் காவல்துறைமா அதிபரின் விடயத்தில் வெளிப்படையான பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எதிர்க்கட்சிகள் குறித்த விடயத்தினை வைத்து அரசியல் சுயலாபம் தேடுவதற்கு முயற்சிகின்றன என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலா தெரிவித்துள்ளார்.



