முள்ளிவாய்க்கால் வழிகாட்டி கல் அகற்றப்பட்டமைக்கு கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்குச் செல்லும் பாதையை அடையாளப்படுத்தும் வகையில் புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுக்கல் இடித்து அகற்றப்பட்டுள்ளமைக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

காவல்துறையினர் ஊடாக நீதிமன்றத்தின் உத்தரவு பெறப்பட்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அண்மையில் குறித்த நினைவுக்கல் இடித்து அகற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலையை நினைவேந்துவதற்கான முள்ளிவாய்கால் முற்றத்திற்கு செல்வதற்கான பாதையை சுட்டிக் காட்டுவதற்காக முல்லைத்தீவு பரந்தன் வீதியில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி கல் முல்லைத்தீவு நீதிமன்றின் கட்டளையை காரணம் காட்டி வீதி அபிவிருத்தி அதிகார சபையால் இடித்தழிக்கப்பட்டுள்ளமையானது அரச திணைக்களங்கள் ஊடாக தமிழினம் மீதான ஒடுக்குமுறைகள் தடையின்றி தொடர்வதனையே காட்டி நிற்கின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகை தொகையின்றி தமிழினம் குண்டுகளாலும், இன்னும் உலகில் மனித குலத்திற்கெதிரானதென தடைசெய்யப்பட்ட ஆயுதங்களாலும், போர் முறைகளாலும் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்ட இனப்படுகொலையை கண்ணீரோடு நினைவுகூரும் உரிமை தமிழினத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது என்பதை காட்டி நிற்கும் ஒன்றாகவே இந்த செயற்பாடு அமைந்துள்ளது.

முல்லைத்தீவு பரந்தன் வீதியின் வீதியோரங்கள் நெடுகிலும் இராணுவ முகாம்களிற்கான பெயர்ப்பலகைகளும், காவலரண்களும் அனுமதியற்ற கட்டடங்களாகவும், கட்டமைப்புக்களாகவும், அமைக்கப்பட்டுள்ளமை வெளிப்படையானதொன்றாகும்.

இடித்தழிக்கப்பட்ட குறித்த வழிகாட்டல் கல்லுக்கு அப்பால் சில மீற்றர் தூரம் தள்ளி முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமின் பெயர் பொறிக்கப்பட்ட கட்டமைப்பு, இதே வீதியில் புதுக்குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வெற்றிச் சின்னம் போன்ற இன்னும் பல கட்டுமானங்கள் அனுமதியற்ற கட்டுமானங்களாகவே உள்ளன.

தற்போதைய நிலையில் சிறிலங்கா காவல்துறையினரின் ஆதரவுடன் இந்த முள்ளிவாய்கால் முற்ற வழிகாட்டல் கல்லும் அகற்றப்பட்டிருக்கின்றது.

இந்த வகையில் சிறிலங்காவில் எந்த அரசுகள் ஆட்சிப்பீடம் ஏறினாலும் தமிழர் விரோத செயற்பாடுகளையும், தமிழின அழிப்பு செயற்பாடுகளையும் கட்டமைக்கப்பட்ட வகையில் அரங்கேற்றி வருகின்றன.

ஆகவே சிறிலங்கா அரசினுடைய இத்தகைய செயற்பாடுகளை தாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு விரைந்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தினையும் வலியுறித்தி நிற்கின்றோம் என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.