வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளை பசுமை தீவுகளாக மாற்றும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, குறித்த மூன்று தீவுகளையும் பசுமை சக்தித் தீவுகளாக மேம்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
எரிசக்தி அமைச்சுக்கான 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய தீவுகளில் தற்போது நடைமுறையில் உள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மையமாக வைத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடியின் போது இடைநிறுத்தப்பட்ட, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட எரிசக்தித் திட்டங்களை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.



