நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை நீடிப்பு விவகாரம்: சர்வஜன அதிகாரம் குற்றச்சாட்டு

ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், நீதித்துறை மீதான தனது அரசியலமைப்புக்கு முரணான தலையீடுகள் மூலம் நாட்டை மீண்டும் 1988, 1989 ஆம் ஆண்டுக் காலப்பகுதியைப் போன்ற ஒரு இருண்ட யுகத்தை நோக்கி நகர்த்த முனைவகிறது. கழுத்தில் டயர்களைப் போட்டு தீர்ப்புகளை வழங்கிய ஜே.வி.பி.யின் காட்டு நீதிமன்றக் கலாச்சாரத்தை மீண்டும் உருவாக்கப் பார்க்கிறார்களோ என்ற பலத்த சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான மதுர விதானகே குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

தற்போதைய அரசாங்கம் கடந்த 70 வருட கால ஆட்சியை கடுமையாகக் குற்றம்சாட்டி, பாராளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துத்தான் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான இந்த குழுவினர் தற்போது அதற்கு மாறாக மிக மோசமான முறையில் செயற்படத் தொடங்கியுள்ளனர்.

வரலாற்றைப் பார்த்தால், 1949 இல் டி.எஸ். சேனாநாயக்க, 1960களில் சிறிமாவோ பண்டாரநாயக்க, 1977 இல் ஜே.ஆர். ஜயவர்தன, 1989 இல் ரணசிங்க பிரேமதாச, 1999 இல் சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் போது மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தங்களுக்குச் சாதகமான நீதிபதிகளை நியமிக்க அல்லது தங்களுக்குப் பாதகமான நீதிபதிகளைப் பழிவாங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அன்று இவ்வாறான அநீதிகளைச் சாடி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று ஒட்டுமொத்த நீதித்துறை கட்டமைப்பையும் அழிக்க முற்படுகிறார்.

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கு அரசாங்கம் தர்க்கமற்ற காரணங்களைக் கூறுகிறது. உண்மையில், நாட்டின் எந்தவொரு தரப்பும் கோராத இந்த ஓய்வு வயதெல்லை நீடிப்பு விவகாரத்தின் பின்னணியில் ஒரு மறைமுகக் காரணம் உள்ளது. நிலக்கரி விநியோக மோசடிகள், ஒப்பந்தப்புள்ளி மோசடிகள் மற்றும் தற்போதைய விசாரணைகள் குறித்தே இந்த அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. தங்களுக்கு எதிராக நாளாந்தம் தாக்கல் செய்யப்படும் வழக்குகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், தங்களைக் கட்டுப்படுத்த முடியாத நீதிபதிகளைத் தவிர்க்கவுமே அரசாங்கம் முயற்சிக்கிறது.

கடந்த 2 வருடங்களாக அனைத்து நீதித்துறை கட்டமைப்புகளும் நடுநிலையாக செயலாற்றி வந்தன. இவ்வாறான நிலையில், அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வந்து நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்க முயல்வது நீதித்துறைக்கு வழங்கப்படும் ஒரு லஞ்சமாகும். எந்தவொரு நீதிபதியும் தங்களின் சேவைக்காலத்தை நீடிக்குமாறு கோரவில்லை என்பது ஒரு சட்டத்தரணியாக எனக்கு நன்றாகத் தெரியும்.

தற்போதைய சுயாதீன நீதித்துறையைத் தகர்த்து, 1988, 1989 ஆம் ஆண்டுக் காலப்பகுதியைப் போல, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, கழுத்தில் டயர்களைப் போட்டு தீர்ப்புகளை வழங்கிய ஜே.வி.பி.யின் காட்டு நீதிமன்றக் கலாச்சாரத்தை மீண்டும் உருவாக்கப் பார்க்கிறார்களோ என்ற பலத்த சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. எனவே, அரசாங்கம் இந்த தன்னிச்சையான முயற்சிகளை உடனடியாகக் கைவிட்டு, உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் தற்போது நிலவும் நீதிபதி வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.