செம்மணி: நீதிக்காகவே எலும்புக்கூடுகள் எழுந்து வருகின்றன – தீபச்செல்வன்

ஈழத் தமிழரின் நிலம் என்பது வெறுமனே ஒரு புவியியல் பரப்பு இல்லை. இங்கு நிலம் என்பது உயிரும் சாட்சியு மானது. ஒரு புறம் சிங்களக் குடியேற்றத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எங்கள் நிலம் போராடுகிறது. இன்னொரு புறம், அதே நிலத்தின் அடியிலிருந்து இனவழிப்பின் புதைக்கப்பட்ட சாட்சிகளாக எலும்புக்கூடுகள் எழுந்து நீதியைக் கேட்டுப் போராடுகின்றன. உண்மையில், செம்மணி என்பது மண் ணின் கீழ் புதைக்கப்பட்ட இனப்படுகொலைகள் குறித்த உண்மைகள் மீண்டும் நீதிக்காக மூச்சுவிடத் துவங்கிய இடம். பல ஆண்டுகளாக ஈழத் தமிழ் தாய்மார்கள் தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை மார்போடு அணைத்தபடி இலங்கை அரசை நோக்கியும், கண்ணீரால் நனைந்த முகங்களுடன் உலகை நோக்கியும் நீதியைக் கோரி நின்றனர். இன்று ஈழ மண்ணில் அவர்களின் குரலோடு இணைந்து, சித்திரவதையின் காயங்களைத் தாங்கிய எலும்புக்கூடுகளும் நீதிக்காகப் பேசத் துவங்கியுள்ளன.
நினைவாக மாறிய நிலம்
உண்மையில் வடக்கு கிழக்கின் மண் வெறும் நிலமல்ல. அது புதைக்கப்பட்ட வரலாறுகளின் களஞ்சியமாகவும் மறைக் கப்பட்ட உண்மைகளின் கல்லறையாகவும் இருக்கிறது. பதி லின்றி காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்க ளின் மௌனக் குரல்கள் துடித்தசைக்கின்ற தாய்நிலம். அவற்றில் மிகவும் கனத்தவொரு நினைவாக நிற்கிறது செம்மணி. யாழ்ப்பாணத்தின் புறநகரில் அமைந்துள்ள இந்த மண், பல தசாப்தங்களாக காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் நினைவிடமாகவும், தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்ட அரசின் இனவழிப்பு வன்முறையின் அடையாளமாகவும் சாட்சியாகவும் இருக்கிறது. அங்கு புதைக்கப்பட்டிருப்பது வெறுமனே மனித உடல்கள் மாத்திமல்ல. எண்ணற்ற குடும்பங்களின் எதிர்காலமும், குழந்தைகளின் கனவுகளும், தாய்மார்களின் வாழ்நாளும்தான்.
1990களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் மீண்டும் இலங்கை இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோது, ஆயிரக்கணக்கான தமிழ் இளை ஞர்கள் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்டனர். காணாமல் ஆக்கப்பட்டனர். இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் அந்தப் பயணம் பெரும்பாலும் ஒருவழிப் பயணமாகவே இருந்தது. தாய்மார்கள் முகாம்களின் வாசல்களில் காத்திருந்தனர். மனைவிகள் கணவர்களின் பெயர்களை அதிகாரிகளிடம் மீண்டும் மீண்டும் கூறினர். குழந்தைகள் ஒவ்வொரு மாலையும் கதவு திறக்கும் ஓசையைக் கேட்டபோது, “அப்பா வந்திட்டாரோ?” என்ற நம்பிக்கையோடு ஓடினர். யாரும் திரும்பவும் இல்லை. பதில்கள் கேட்கவும் இல்லை.
கிருஷாந்தி வழக்கு
அக்காலத்தில் செம்மணி இராணுவ முகாம் என்ற பெயரே தமிழர்களுக்கு அச்சத்தின் மற்றொரு பெயராகத்தான் இருந்தது. அங்கு அழைத்துச் செல்லப்பட்ட பலர் மீண்டும் உயிருடன் திரும்பவில்லை என்ற சாட்சிகள் தொடர்ந்து வெளிவந்தன. உண்மையை நிரூபிக்கும் ஆதாரங்கள் அனைத்தும் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்தன. 1998ஆம் ஆண்டு, மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, குற்றவாளிகளுள் ஒரு வரான இராணுவ உறுப்பினர் சோமரத்ன ராஜபக்ஷ நீதிமன்றத் தில் அதிர்ச்சிகரமான வாக்குமூலமொன்றை வழங்கினார். யாழ்ப்பாணத்தின் செம்மணியில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
அந்த ஒரே வாக்குமூலம்தான் செம்மணி மண் ணைச் சாட்சிக் கூண்டுக்குள் அழைத்துவந்தது. பின்னர் நடைபெற்ற அகழ்வாய்வுகளில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் உண்மையை முழுமையாக வெளிக்கொணர வேண்டிய அந்த முயற்சிகள் அரசியல் தலையீடுகளாலும், நீதியைத் தவிர்க்கும் திட்டமிட்ட செயல் களாலும் பாதியில் நிறுத்தப்பட்டன. சில எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன; ஆனால் அவற்றின் பின்னால் இருந்த ஆயிரக்கணக்கான உயிர்களின் கதைகள் புதைக் கப்பட்டபடியே விடப்பட்டன. செம்மணி வழக்கில் மண்ணுக் குள் புதைக்கப்பட்டவர்களைப் போலவே உண்மையும் மீண்டும் புதைக்கப்பட்டது. இப்போது, இருபத்தெட்டு ஆண்டு களுக்குப் பின்னர், மீண்டும் செம்மணி அகழப் படுகிறது. ஆனால் காலம் நகர்ந்தாலும், ஆட்சிகள் மாறினாலும், மண்ணின் கீழே புதைக்கப்பட்டிருந்த எம் சனங்களின் குரல்கள் தீரவில்லை. யார் கொன்றார்கள்? ஏன் கொன்றார்கள்? எத்தனை பேர் புதைக்கப்பட்டனர்? ஒட்டுமொத்த தமிழினமும் இன்று செம்மணியின் நீதிக்காக, செம்மணியில் கொன்றழிக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் விபரங்களுக்காக்க் காத்திருக்கிறது.
இலங்கையின் மிகப் பெரிய மனிதப் புதைகுழி
இலங்கையின் போருக்குப் பிந்தைய வரலாற்றை எழுத வேண்டுமாயின், அது கூட்டுப் புதைகுழிகளின் வரலாறாகவும் எழுதப்பட வேண்டும். மன்னார் சாத்திக்குளம், கொக்குத்தொடுவாய், எனப் பல இடங்களில் மனித எச்சங் கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இப்போது மீட்புப் பணியில் 400 எலும்புக் கூட்டு எச்சங்களை கடந்துள்ள நிலையில், செம்மணி இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக அடையாளம் பெற்றுள்ளது. ஶ்ரீலங்கா அரசும் அதன் படைகளும் தமிழர் நிலத்தில் நிகழ்த்திய சாத னைதான் இது.
உண்மையில் ஒவ்வொரு எலும்புக்கூடுகளின் முகங்களையும் பார்க்கையில், ஒவ்வொன்றும் ஒரு குடும்பத்தின் காத்திருப்பைச் சொல்கிறது. ஒவ்வொரு மண்டையோடும் நிறைவேறாத ஒரு கனவின் துயரத்தை நம்மிடம் பேசுகிறது. ஒவ்வொரு உடைந்த எலும்பும் சித்திரவதையின் வாதையைக் கூறுகிறது. மண்ணின் கீழிருந்து எழும் இந்த வாக்குமூலங்கள் நீதிமன்றங்களில் கேட்கப்படுவதில்லையே? மனித மனச்சாட்சிக்குள்ள்தான் இவைகள் ஒலிக்கின்றன.
எலும்புக்கூடுகளின் சாட்சியம்
செம்மணியில் இருந்து எழும் ஒவ்வொரு எலும்புக்கூடும் இலங்கையின் நீதித்துறையை நோக்கிக் கேள்வியை எழுப்புகிறது. அதே நேரத்தில் சர்வதேச சமூகத்தையும் அது நேராக நோக்கிக் குரல் எழுப்புகிறது. ஒரு தீவில் இவ்வளவு பெரிய மனிதப் புதைகுழி இருக்கும்போது, உலகம் இன்னும் அமைதியாக இருக்க முடியுமா? அண்மையில் இலங்கையின் நீதியமைச்சர் செம்மணிக்குச் சென்று அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டார். ஆனால் தமிழர்கள் கேட்பது ஒரு ‘விசிட்டை’யல்ல. எமக்கு நீதியே தேவை. ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் பலர் நீதியைக் காணாமலேயே உயிர் நீத்துவிட்டனர். இன்னும் பலர் வயது முதிர்ந்த கைகளில் புகைப்படங்களை ஏந்திக்கொண்டு போராட்ட வரிசையில் நிற்கின்றனர். அவர்களுக்கான நீதியைத்தான்  செம்மணியில் எழும் எலும்புக்கூடுகள் கேட்கின்றன.
செம்மணியின் மண்ணுக்குள் இன்னும் எத்தனை கதைகள் புதைந்திருக்கின்றன என்பது தெரி யாது. ஆனால் ஒன்று மாத்திரம் தெளிவாகத் தெரி கிறது. இந்த மண் இனியும் மௌனமாக இருக்காது. மண் ணின் கீழிருந்து எழும் எலும்புக்கூடுகள் வெறுமனே சாட்சிகள் மாத்திரமல்ல. நீதிக்காக போராடும் உயிருள்ள வரலாறுகள். செம்மணிக்கான நீதி என்பது சில எலும்பு களை அடையாளம் காண்பதல்ல. அது ஈழத் தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையின் உண்மையை ஏற்றுக் கொள் வதும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச் செய்வ தும், இனப்படுகொலையை மறுப்பதற்கான ஶ்ரீலங்கா அரசின் எல்லா முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதுமாகும்.
அந்த நீதியை வழங்கும் வல்லமை, இதுவரை தோல்வியடைந்த உள்நாட்டுப் பொறிமுறைகளில் இல்லை. சுயாதீனமான, நம்பகமான சர்வதேச விசாரணையும் சர்வதேச நீதிப் பொறிமுறைகளுமே செம்மணிக்கும், காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கும், இன்னும் காத்திருக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும்  ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கும் உண்மையான நீதியைப் பெற்றுத்தரக்கூடிய ஒரே வழியும் தீர்வுமாகும்.