இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள நிலையில், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட 46,000 சிறுவர்களுக்கான நீதியை நிலைநாட்ட அரசாங்கம் உடனடியாக களமிறங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு வழிகாட்டல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் காட்டும் தாமதம், எதிர்கால தலைமுறைக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் அவர் சாடியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சிறுவர் உரிமைகள் சம்பந்தமாக செயற்படும் சிவில் அமைப்பின் நீதி கோரல் மகஜரிலும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் மற்றும் சுஜீவ சேரசிங்க, கவிந்த ஜயவர்த்தன ஆகியோர் கையொப்பமிட்டமையும் குறிப்பிடத்தக்கது.



