ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலால் வடக்கில் எழுந்துள்ள ஜனநாயக நெருக்கடி: விதுரன்

வடக்கு மாகாண அரசியல் சூழல், அண்மைய நாட்களாக மாகாண ஆளுநரின் தன்னிச்சையான அதிகாரப் பிரயோகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் இறை யாண்மை மீதான அத்துமீறல்கள் காரணமாகப் பெரும் கொந்தளிப்பான நிலையை அடைந்துள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேத நாயகத்தினால் 19-06-2026அன்று வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இரண்டு நாட்டின் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அரசியல் வரலாற்றில் மிக மோசமானதொரு முன்னுதாரணத்தைத் அம்பலப் படுத்தியுள்ளது.
வவுனியா மாநகர சபையின் மேயர் திரு. சுந்தர லிங்கம் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உபதவிசாளர் திரு. ஞானப்பிரகாசம் கிஷோர் ஆகியோரை அவர்களின் பதவிகளிலிருந்து நீக்கியது மட்டுமன்றி, மக்களால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படைச்சபை உறுப்புரிமையையும் வறிதாக்கும் வகையில் வர்த்தமானி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்ற மாவட்ட நீதியரசர் கந்தையா அரிய நாயகம் தலைமையிலான தனியொருவர் கொண்ட விசாரணைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே ஆளுநர் இந்த அதிரடித் தீர்மானத்தை எடுத்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாநகர சபை தொடர்பான தீர்மானம் சாவகச் சேரி நகர சபை தொடர்பான தீர்மானம் ஆகியன கோப்புக் களில் உள்வாங்கப்பட்பட்டு சட்டபூர்வமானவையாக காணப் படுகின்றன. எவ்வாறாயினும், இந்த நடவடிகையானது மக்கள் வழங்கிய ஜனநாயக ஆணையை அப்பட்டமாகத் துஷ்பிரயோகம் செய்யும் செயலாகவும், நீதிமன்றக் கட்டமைப்பிற்கு அப்பால் நிர்வாக அதிகாரம் கொண்ட நபரால் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயகப் படுகொலையாகவுமே பார்க்க வேண்டியுள்ளது.
இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள குற்றச் சாட்டுகளையும் அதற்கான தர்க்கங்களையும் ஆராயும்போது, ஆளுநரின் வர்த்தமானி அறிவிப்பு எவ்வளவு தூரம் பலவீனமான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட கார ணங்களை அடிப்படையாகக் கொண்டது என்பது மிகத் தெளிவாகப் புலனாகிறது.
முதலாவதாக, வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் அவர்கள் மீது ஏதோவொரு ஊழல் குற்றச் சாட்டு முதன்மைப்படுத்தப்பட்டு, அதன் மூலமே அவர் பதவியிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், வவுனியா மாநகர சபையில் அவர் ஆட்சியமைத்து வெறும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள்ளேயே, அவர் பாரிய ஊழலில் ஈடுபட்டார் என்று கூறி அவரது மக்கள் பிரதிநிதித்துவத்தைப் பறிப்பது எந்தவொரு தர்க்கரீதியான அறிவுக்கும் எட்டாத முட்டாள்தனமான விடயமாகும்.
மிகக் குறுகிய காலத்திற்குள் ஒரு சபையின் நிர்வாகக் கட்டமைப்பைக் கூட முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், இத்தகைய பாரதூரமான குற்றச்சாட்டை அவர் மீது சுமத்துவது அரசியல் பழிவாங்கல் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
அதுதட்டுமன்றி, குறித்த விடயம் சம்பந்தமான வழக்கில் வவுனியா மாவட்ட நீதிமன்றத்தின் இறுதி அறிவிப்பின் பிரகாரம் காண்டீபன் மேயர் பதவியை தொடர்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றக் கட்டளைக்கு அப்பால் சென்று ஆளுநர் தீர்மானம் எடுப்பது எந்தவகையில் நியாயமானதாகும்.
மறுபுறம், சாவகச்சேரி நகர சபை உபதவிசாளர் கிஷோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு இன்னும் வேடிக்கையானது. உள்ளுராட்சி ஆணையாளரால் அனுப்பி வைக்கப்பட்ட ஒரு சுற்றுநிருபத்தை அவர் சபை யில் விமர்சித்து, அதனைத் தூக்கி எறிந்தார் அல்லது கிழித் தெறிந்தார் என்பதாகும்.
உள்ளுராட்சி ஆணையாளர் என்பவர் மக்கள் பிரதிநிதி அல்ல, அவர் ஒரு நியமிக்கப்பட்ட அரச அதிகாரி மட்டுமே. அவர் வழங்கும் சுற்றுநிருபங்கள் மாறாத வேத வாக்குகளோ அல்லது விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட புனிதமான ஆவணங்களோ அல்ல.
மக்கள் வழங்கிய அதிகாரத்தின் மூலம் சபையில் அமர்ந்திருக்கும் ஒரு பிரதிநிதிக்கு, மக்கள் நலனுக்குப் புறம்பான அல்லது குறைபாடுகள் நிறைந்த ஒரு சுற்றுநிருபத்தை விமர்சிப்பதற்கும், அதன் மீதான தனது கடுமையான எதிர்ப்பைக் காட்டுவதற்கும் முழுமையான தார்மீக உரிமையுள்ளது.
அத்தகையதொரு ஜனநாயகப் போராட்ட வடிவத் தைக் காரணியாகக் காட்டி, ஒரு மக்கள் பிரதிநிதியின் பதவியையும் சபை உறுப்புரிமையையும் பறிக்கும் அளவு க்கு ஆளுநர் செல்வது என்பது எதேச்சதிகாரத்தின் அதியுச் சக்கட்டமாகும்.
இவ்விடயத்தில் மிக முக்கியமான சட்ட ரீதியானதும் தார்மீக மிக்கத்துமான அடிப்படைக் கேள்விகள் உள்ளன. அதாவது, மக்கள் பிரதிநிதிகள் மீது குற்றச்சாட்டுகள் இருக்கும் பட்சத்தில் அதனைக் கையாள்வதற்கான சரியான வழிமுறை எதுவென்பதாகும்.
இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியின்படி, ஒரு பிரதிநிதி முறைகேடுகளில் ஈடுபட்டால் அல்லது சட்டத்தை மீறினால், அதுகுறித்து தகுந்த சான்றுகளுடன் நீதிமன்றத்தை நாட வேண்டும்.
நீதிமன்றத்தின் முன்னிலையில் இருதரப்பு வாதங் களும் நியாயமாகக் கேட்கப்பட்டு, சுயாதீனமான நீதிபதிக ளால் மட்டுமே அவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்பட வேண்டும்.
அதை விடுத்து, மாகாண சபைத்தேர்தல்கள் நடத் தப்படாதவொரு சூழலில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மற்றும் ஜனாதிபதியின் முகவராகச் செயற்படும் ஆளுநருக்கு, மக்களின் ஆணையைக் கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய தனிப்பட்ட அதிகாரங்கள் எவ்வாறு இருக்க முடியும்?
தமக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரப் பின்னணியைத் தவறாகப் பயன்படுத்தி, ஆளுநர் இந்த விடயத்தில் முற்றிலும் தான்தோன்றித்தனமாகவும், சட்டத் திற்குப் புறம்பாகவும் நடந்துகொண்டுள்ளார் என்பது தெளி வாகிறது.
ஆளுநர் என்ற பதவி மாகாணத்தின் நலனையும் சட்ட ஒழுங்கையும் பாதுகாப்பதற்கே அன்றி, மக்களின் வாக்குப்பலத்தால் உருவான உள்ளுராட்சி அமைப்புகளைத் தங்களின் விருப்பப்படி கலைப்பதற்கோ அல்லது ஒடுக்கு வதற்கோ அல்ல. இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க சட்டத்தின் ஆட்சிக்கும், இயற்கை நீதியின் கோட்பாடு களுக்கும் முற்றிலும் முரணானதாகும்.
இதன் பின்னணியில் உள்ள அரசியல் சூழ்ச்சி களை உற்றுநோக்கும்போது, தற்போதைய ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரட்டை வேடமும், அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலும் அம்பலமாகின்றன.
இந்த ஆளுநர் தொடர்ந்து தனது பதவியில் நீடிப்பதற்காக, தற்போதைய ஆளும் தரப்பிற்கு ஆதரவாகவும் அவர்களின் விருப்பத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவும் இவ்வாறான ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபடு கிறாரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள் ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட காண்டீபன் மற்றும் கிஷோர் ஆகிய இருவரும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களாக இருப்பதனால், தமிழ் தேசியக் கட்சிகள் ஆட்சி புரியும் சபைகளைக் குறிவைத்து ஒடுக்குவதற்கும், அவர்களின் ஆட்சியை இல்லாது செய்வதற்கும் திட்டமிட்டே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்ற நியாயமான கேள்வி எழுகிறது.
தெற்கில் ஜனநாயகம், ஊழல் ஒழிப்பு மற்றும் நல்லாட்சி பற்றி நீண்ட வகுப்பெடுக்கும் ஜனாதிபதி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதற்கு நேர்மாறாகத் தனது முகவர்களாகவும் எடுபிடிகளாகவும் ஆளுநர்களை நியமித்து இத்தகைய அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
வடக்கில் நடக்கும் அனைத்து ஜனநாயகப் படுகொலைகளுக்கும் தற்போதைய ஜனாதிபதியும் அவரது அரசாங்கமுமே முழுமையாகப் பொறுப்பு கூற வேண்டும். அரசாங்க அதிபராக இருந்த காலத்தில் வேதநாயகம் அவர்களை ஒரு சிறந்த சேவகராக மக்கள் கருதினாலும், தற்போது அவர் ஜனாதிபதியின் முழுமையான முகவராக நியமிக்கப்பட்ட பின்னர், வெறும் அரசியல் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயற்படும் கூலியாகத் தள்ளப்பட்டுள்ளார் என்பது கசப்பான உண்மையாகும்.
இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான அதி காரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தாலும், மாகாண சபைத் தேர்தல்கள் பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ளூர் நிர்வாகங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் மத்திய அரசாங்கம், மாகாண உள்ளூராட்சி அமைச்சருக்குரிய அதிகாரங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநரின் கைகளில் கொடுத்து, அதன் மூலம் தமிழ் மக்களின் உள்ளூர் அரசியல் பிரதிநிதித்துவத்தைச் சிதைக்கப் பார்க்கிறது.
இது முன்னைய இனவாத அரசாங்கங்கள் வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஒடுக்குவதற்குப் பயன்படுத்திய அதேதந்திரோபாயத்தின் தொடர்ச்சியாகவே பார்க்கப்பட வேண்டும்.
வட,கிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களின் அரசியல் வலிமையையும் அவர்களின் சுயநிர்ணய உரிமையையும் சிதைக்கும் நோக்குடன், ஒருபுறம் போதைப்பொருள் பரவலைக் கட்டுப்படுத்தாமல் மக்களை அழிக்கும் வேலைகளும், மறுபுறம் அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவங்களைக் கேலிக்கூத்தாக்கும் வேலைகளும் மிகத் தந்திரமாக அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
உள்ளுராட்சி ஆணையாளரின் வெறும் சுற்றறிக் கையை விமர்சித்ததற்காக ஒரு பிரதிநிதியை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்குவது என்பது உலக ஜனநாயக வரலாற்றிலேயே அதியுச்ச கேலிக்கூத்தான விடயமாகும். இத்தகைய அடக்குமுறைகளுக்கு எதிராக வடக்கு மக்கள் தங்களின் பலத்த மக்கள் எதிர்ப்பை மிகவும் அமைதியான மற்றும் உறுதியான வழிகளில் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
சாவகச்சேரி நகர சபை உபதவிசாளர் கிஷோரின் பதவி பறிக்கப்பட்டு, அவரது உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரியும், ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்தும் சாவகச்சேரி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து முழுமை யான கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தத் தன்னிச்சையான வர்த்தமானி அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, 26-06-2026அன்று சாவகச்சேரி நகரின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு, போக்குவரத்துகள் முடக்கப்பட்டு, மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் வீரியமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மக்கள் எழுச்சியானது, மக்களின் வாக்குரி மையையும் அவர்களின் அரசியல் ஆணையையும் எந்தவொரு தனிநபர் அதிகாரத்தாலும் அவ்வளவு எளிதாக நசுக்கிவிட முடியாது என்பதற்கான தெளிவான சான்றாகும்.