‘எல் நினோ’ தாக்கம் : ஜனாதிபதி ஆலோசனை!

எல் நினோ காலநிலை நிலைமையினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்துக் கவனம் செலுத்தி, தற்போதுள்ள தரவுகளின் அடிப்படையிலான முன்னறிவிப்புகள் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.

தேசிய பேரிடர் முகாமைத்துவ சபை, ஜனாதிபதியின் தலைமையில்  நேற்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, எல் நினோ நிலைமைக்கு முகம் கொடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், பேரிடர் முகாமைத்துவ அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய பேரிடர் ஒருங்கிணைந்த பொறிமுறை குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் மின் உற்பத்தி ஆகிய துறைகளின் ஆயத்த நிலைமைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.

​பெரும்போக விவசாய நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆரம்பிப்பது, நீர் வள  முகாமைத்துவ மற்றும் வனவிலங்கு வலயங்களில் ஏற்படும் நீர் தட்டுப்பாடு காரணமாக வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது. வனவிலங்கு வலயங்களுக்குள் உள்ள குளங்களை விரைவாகப் புனரமைக்குமாறு ஜனாதிபதி சுற்றுச்சூழல் அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், நீர்மின் உற்பத்தியைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்காக நீர்த்தேக்கங்களின் நீர்க் கொள்ளளவை முறையாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் சூரிய சக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமிப்பதற்குத் தேவையான மின்கலங்களை இறக்குமதி செய்வதை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, பல நிறுவனங்களின் கீழ் சிதறிக்காணப்படும் பேரிடர் முகாமைத்துவப் பணிகளை ஒரே மத்திய நிலையத்தின் கீழ் கொண்டு வருவதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள “தேசிய பேரிடர் முகாமைத்துவ ஒருங்கிணைந்த பொறிமுறை” குறித்த குழு அறிக்கையும் இதன்போது சமர்ப்பிக்கப்பட்டது.

2005ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க பேரிடர் முகாமைத்துவச் சட்டத்தில் உள்ள, பாதிப்பு ஏற்பட்ட பின்னர் செயல்படும்  தற்போதைய முறைமைக்கு பதிலாக, பேரிடர்களை முன்கூட்டியே தடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் புதிய சட்டக் கட்டமைப்பின் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் தேசிய பேரிடர் நிவாரணச் சேவை மையம் (NDRSC) ஆகியவற்றை ஒன்றிணைத்து, சேவைகளை மிகவும் திறம்பட மாற்றுவதற்கான முன்மொழிவு ஒன்றும் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.

மண்ணச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் மக்கள், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களை மீளக் குடியேற்றுவதற்காக, நான்கு வருட காலப்பகுதிக்குள் செயல்படுத்தக்கூடிய திட்டமொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

மீட்பு நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்வதற்கு முப்படைகளுக்கும் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் ஹெலிகொப்டர் வசதிகளை மேம்படுத்துதல், பிரதேச மட்டத்தில் பேரிடர் உபகரணங்களின் பராமரிப்பை வலுப்படுத்துதல் மற்றும் 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட பேரிடர் செயல்பாட்டு மையங்களை நிறுவுதல் குறித்தும் இதன்போது தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.