கடந்த புதன்கிழமை(24) வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் (ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5) ஏற்பட்டன. இதில் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 1430 ஆக அதிகரித்துள்ளதோடு காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3000 -திற்கும் மேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கராகஸ் மற்றும் லா குவைரா ஆகிய இடங்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன; உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச மீட்புக் குழுக்கள் அங்கு சென்றுள்ளன.
“இப்பேரிடர் பரவலான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், 10,000 முதல் 1,00,000 பேர் வரை உயிரிழந்திருக்கக்கூடும்” என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஒரே நாளில் பூமி நான்கு குறிப்பிடத்தக்க நிலநடுக்கங்களைச் சந்தித்துள்ளது. முதலாவதாக, கலிபோர்னியாவின் ரெட்வுட் பள்ளத்தாக்கில் 5.6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 7 மணி நேரம் கழித்து, வடக்கு வெனிசுலாவில் பேரழிவை ஏற்படுத்திய “இரட்டை” நிலநடுக்கங்கள் நிகழ்ந்தன; இதில் முதலாவது 7.2 ரிக்டர் அளவையும், அதைத் தொடர்ந்து வெறும் 39 வினாடிகளுக்குப் பிறகு ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவையும் கொண்டிருந்தன.
இறுதியாக, வெனிசுலாவில் ஏற்பட்ட அந்த இரட்டை நிலநடுக்கங்களுக்குப் பிறகு வெறும் 25 நிமிடங்களில், ஜப்பானின் குஜி (Kuji) கடற்கரைப் பகுதியில் 6.9 ரிக்டர் அளவுள்ள கடல்சார் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவ்வளவு குறுகிய காலத்தில் உலகம் முழுவதும் இத்தகைய நில அதிர்வுச் செயல்பாடுகள் நிகழ்வது மிகவும் அரிதான ஒன்றாகும்.
சமீபத்தில் பூமியில் தீவிர நில அதிர்வு நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன. ‘பசிபிக் நெருப்பு வளையம்’ (Pacific Ring of Fire) எனப்படும் பரந்த நிலத்தட்டுப் பகுதியில் மிதமான மற்றும் அதிக தீவிரத்தன்மை கொண்ட குறைந்தது ஐந்து நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ள நிலையில், வெனிசுலாவில் 7.2 மற்றும் 7.5 ஆகிய தீவிரத்தன்மை கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் வெறும் 39 வினாடி இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன. உலகின் நில அதிர்வு நடவடிக்கைகளில் சுமார் 90 சதவீதத்தை ‘பசிபிக் நெருப்பு வளையம்’ கொண்டுள்ளது.


