இந்திய வீட்டுத்திட்டப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். வீடமைப்பிற்கு முன்மொழியப்பட்டுள்ள காணிகளை விரைவாக விடுவிக்குமாறும், பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பதற்கான அறிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விரைந்து வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்திய நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள 4,700 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் நேற்று புதன்கிழமை (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ்,தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பேரிடர் அபாயம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு 2026 வீடுகள் வழங்கப்படவுள்ளதுடன், ஏனைய வீடுகள் அடையாளம் காணப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கமைய, 22 பிராந்திய தோட்ட நிறுவனங்கள் மற்றும் அரச தோட்டக் கூட்டுத்தாபனம், ஜனவசம அல்கடுவ ஆகிய தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான தோட்டங்களில் வசிக்கும் மலையக மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன. இந்த திட்டத்தில் தலா ஒரு வீடு கட்டுமானத்திற்காக இந்திய அரசு 28 இலட்சம் ரூபாவையும், இலங்கை அரசு 4 இலட்சம் ரூபாவையும் ஒதுக்கியுள்ளன.



