தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியை சந்திக்க திட்டம்

தமிழ் மொழி பேசுகின்ற சிறுபான்மை தேசிய இனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அனைத்துக்கட்சிகளும் கூட்டிணைந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்திப்பதற்கு முயற்சிகளை எடுத்துள்ளன.

அதற்கமைவாக, இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய தரப்புக்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் முதலாவது உரையாடலொன்று அண்மையில் கொழும்பில் நடைபெற்றுள்ளது

இதன்போது ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அண்மைக்காலச் செயற்பாடுகள், மற்றும் அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் காலங்கடத்தும் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலின்போதும், பின்னர் பாராளுமன்ற தேர்தலின்போதும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் நீடிக்கின்றவற்றை கோடிட்டுக் காண்பித்து கடிதமொன்றையும் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கான வரைவு தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த வரைவு எதிர்வரும் வாரமளவில் இறுதிசெய்யப்பட்டு அடுத்த பாராளுமன்ற காலப்பகுதியில் ஜனாதிபதி அநுரகுமாரவைச் சந்திப்பது இலக்காகவுள்ளது.

இதேநேரம், குறித்த கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் உள்ளீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.