இந்நாட்டின் சகல துறைகளினதும் அபிவிருத்தியில் பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ச்சியான தனது பங்களிப்பினை வழங்கும் என பாகிஸ்தான் தூதுவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் உறுதியளித்துள்ளார்.
சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கலாநிதி நய்யர் நசீர் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல் திங்கட்கிழமை (8) சுகாதார அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நற்புறவு, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருதரப்பும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. இரு நாடுகளினதும் சுகாதார சேவைகள் மற்றும் மருந்து விநியோகத்தை மேம்படுத்துதல், மருத்துவக் கல்விக்கான ஒத்துழைப்பு மற்றும் குறிப்பாக பாகிஸ்தானில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களுக்கான மருத்துவ புலமைப்பரிசில்களை மீளாய்வு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.
மேலும், இரு நாட்டு கலாசாரங்களை உள்ளடக்கிய ஊடக நிகழ்ச்சிகளைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் சுற்றுலா மற்றும் ஊடகத்துறையை மேம்படுத்துவது குறித்தும், கூட்டுப் பயிற்சித் திட்டங்கள் மற்றும் ஆவணப்படங்களை திரையிடுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
தொலைக்காட்ச்சி-நாடகங்களை ஒளிபரப்புவது உள்ளிட்ட புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக, இலங்கை ஊடக அமைச்சுக்கும் பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சுக்கும் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவுபடுத்துமாறு உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்திருந்தார். இதற்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இச்சந்திப்பின் நிறைவில், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு உயர்ஸ்தானிகர் அழைப்பு விடுத்தார். இக்கலந்துரையாடலில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் வர்த்தக மற்றும் முதலீட்டு அதிகாரி மஹ்வாஷ் சாமி, ஊடக மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர் அதீல் சத்தார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



