வடகிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தின் பின்னடைவுகள்.! : பா.அரியநேத்திரன்

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவான வளர்ச்சியைக் காணக் கூடும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.  ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளங்களில் மனிதமூலதனத்தையும் நிதி மூலதனத்தையும் அதிக நலிவுக்குள்ளாக்கும் காரணிகளாக சமூகநலத்துறைச் செலவீனங்கள் இருந்து வருகின்றன. கடந்தகால போர் 2009, மே,18, ல் மௌனிக்கப்பட்டாலும் கடந்த 17, வருடங்களாக போரின் விளைவுகளால், வடக்கு கிழக்கில், பாதிப்படைந்தோர் எண்ணிக்கை மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்விரு மாகாணங்களிலும் சமூக நலத்துறையின் பணிகள் மிக அதிகளவில் வேண்டிய தாகவுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரம் என்பது பிரதானமாக விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு மற்றும் சிறு கைத்தொழில்களை அடிப்படையாகக் கொண்டது. விவசாயம் எனும்போது நெல், மரக்கறிகள் மற்றும் பலவகையான பயிர்கள் விளைவித்தல் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்கள் விவசாயத்திற்குப் பெயர் பெற்றவை.
நீர்ப்பாசன வசதிகள், குளங்களை நம்பிய செய்கை மற்றும் சந்தை வாய்ப்புகள் இத்துறையின் பலமாகவும் சவாலாகவும் உள்ளன. மீன்பிடித் தொழிலை நோக்கினால் கடல் மற்றும் வாவி, குளங்கள் என்பனவும், உள்நாட்டு மீன்பிடி வடகிழக்குக் கடற்கரைப் பகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரமாகும். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இத் தொழிலை நம்பியுள்ளன.
கால்நடை வளர்ப்பு என்பது மாடு, ஆடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி இப்பகுதி மக்களின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் மாடுகளை வீட்டில் கட்டி வளர்க்கும் குடும்பங்கள் மிக குறைவு பட்டியாக நிலத்தில் மேயவிட்டு மாடுகளை வளர்க்கும் பாரம்பரியம் பூர்வீக காலம் தொட்டு உள்ளது. அதற்காக மட்டக்களப்பில் மயிலத்தமடு, மாதவனை மேச்சல் தரைகளில் காலம் காலமாக மாடுகள் வளர்க்கப்பட்டன. தற்போது பெரும்பான்மை இனத்தவர்களை கொண்டு குடியேற்றம் செய்து மேச்சல்தரைகளை அபகரிப்பதால் மாடுகள் மேய்வதற்கும் காணி இல்லாத நிலை உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் இனவிகி தாசாரத்தை குறைக்க திட்டமிட்ட சிங்கள குடியேற்றங் களுக்கு இந்த காணிகள் அபகரிப்பு செய்யப்படுகிறது.
பல போராட்டங்களை பண்ணையாளர்கள் மேற்கொண்டும் வாய்மூல உத்தரவாதமும் நம்பிக்கையும் மட்டுமே ஆட்சியாளர்களால் கூறியும் எந்த பயனும் இல்லை கடந்த 20/05/2026, ல் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வருகை தந்த ஜனாதிபதி அநுர மேச்சல் தரைக்கு 1580, ஏக்கர் காணி வனபரிபாலன திணைக்களத்தில் இருந்து பெற்றுத்தருவதாக கூறினார், அந்த காணியில் மட்டக்களப்பில் உள்ள மூன்று இலட்சம் மாடுகளும் மேய்வதற்கு போதாது என்பதே பண்ணையாளர்களுடைய கருத்தாகும் 3000, கெக்டயர் காணி மேச்சல் தரைக்கு தேவை என்பதே உண்மை.
இந்த பிரச்சனைகளுக்கு அப்பால் வடகிழக்கில் தற்கால சவால்களாக காணி மற்றும் நிலப் பிரச்சினை, மக்களின் பூர்வீகக் காணிகள் மற்றும் விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. சட்ட விரோத மீன்பிடி வெளிமாவட்ட மற்றும் இந்திய இழு வைப்படகுகளின் அத்துமீறல்களால் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
அடிப்படை வசதிக் குறைபாடுகளாக நவீன சந்தைப் படுத்தல் வசதிகள், தொழில்நுட்ப அறிவு மற்றும் மூல தனம் இன்மையால் உற்பத்திப் பொருட்களுக்கான உரிய விலையை மக்கள் பெறுவதில் சிரமம் உள்ளது. நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் பொருட்களின் விலையேற்றம், சாதாரண உழைப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் கடினமாக்கியுள்ளது.
வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக தொடர்கிறது. அதற்கு எதிராக மக்களுடன் சில அரசியல் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும் காண்கிறோம். போருக்குப்பின் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் வடிவமாக இது தொடர்கிறது. நிலஅபகரிப்புக்கு எதிராக எழும் குரல்கள் நிலம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான உற்பத்திச்சாதனம் மட்டுமல்ல அதற்கும் அப்பால் அது அவர்களின் கூட்டு அடையாளத்தின் பொருள் ரீதியான அடித்தளமாய் அத்துடன் இணைந்த சுலபமாக அளவிடமுடியாத அகரீதியான குறியீட்டு விழுமியங்களின் உறைவிடமாய் விளங்குகிறது
சுருங்கக்கூறின் வடக்கு கிழக்கின் குடியேற்றத் திட்டங்கள் நிலமற்ற விவசாயிகளை அரசசெலவில் அரச காணிகளில் குடியேற்றும் திட்டமானது இனமேலாதிக்க அரசின் ஆள் புலத்தின் இனத்துவமயமாக்கல் கொள்கையின் அமுலாக்கலுக்கு உதவுகிறது. நிலமற்ற விவசாயிகளுக்கு நாட்டின் எந்தப்பகுதியிலும் அரச நிலத்தை வழங்குவது நிலமின்மைக்கு ஒரு தற்காலிகத் தீர்வாகலாம். அந்த வகையில் அது நியாயமானதாகவும் இருக்கலாம். ஆனால் இந்தக் குடியேற்றத்திட்டங்கள் தமிழ்பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் இனச்செறிவை மாற்றும் நோக்குடன் பெரும்பான்மை இனத்துவ மேலாதிக்கத்தை உறுதியாக்கும் கருவியாகப் பயன்படுத்தபடுவதே பிரச்சனைக்குரியதாகும்.
ஒவ்வொரு அரசாங்கமும் குடியேற்றத்திட்டங்களை தமது கட்சி அரசியல் நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் அதேவேளை குடியேற்றக் கொள்கையின் தொடர்ச்சியான அமுலாக்கல் செயற்திறன் மிக்க நிர்வாக இயந்திரத்தின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. குடியேற்றக் கொள்கையின் அரசியல், கருத்தியல் மற்றும் கலாச்சார நோக்கங்களெல்லாம் இந்த நிர்வாக இயந்திரத்தி னால் உள்வாங்கப்பட்டுள்ளன.
தமிழ்தேசியவாதத்தின் தாயக கோரிக்கையின் அடிப்படையான இணைப்பை உடைப்பதே. இந்த வகையில் மணலாறு வெலிஓயாவாக மாறியது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. வடகிழக்கு இணைப்பின் இனரீதியான, பிரதே சரீதியான தொடர்ச்சியை மீட்க முடியாதவாறு உடைப்பதில் இந்த நிகழ்ச்சி அரசியல், புவியியல் மற்றும் குறியீட்டுக் காரணங்களால் விசேட முக்கியத்துவம் பெறுகிறது.
வறுமை பொருளாதார சீரின்மை காணி அப கரிப்பு வடகிழக்கில் ஒருபுறம் உள்ள நிலையில் கடந்த கால போர் மற்றும் வறுமை காரணமாக இயலாமைக்குட் பட்டோர்களாகவும் எமது தாயகத் தில் பலர் உள்ளனர் இவ்வாறு வடக்கு மாகாணத் தில் 21,668 பேரும், கிழக்கு மாகாணத்தில் 18,337 பேரும் முழு அளவிலும், பாதியளவிலுமாக இய லாமைக்குட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர். பிர தான இயலாமைத் தன்மையின் அடிப்படையில் ஆராயும் போது, பார்வைக்குறைபாடுடையவர்கள் வடக்கு மாகா ணத்தில் 1,826 பேரும், கிழக்கு மாகாணத்தில் 1,598 பேரும் செவிப்புலன் இழந்தோர், வாய்பேச முடியாதோர் வடக்கில் 3,083 பேரும், கிழக்கில் 2,509 பேரும் உள்ளனர். அங்கங்களை இழந்தவர்கள் என்றவகைப்பாட்டில், கால் மற்றும் கைகளை இழந்தவர்கள் வடக்கில் 10,581 பேரும், கிழக்கில் 4,228 பேரும் காணப்படுகின்றனர்.
மனநலப் பாதிப்புக்குட்பட்டோர் என்றவகையில் வடக்கில் 6,182 பேரும், கிழக்கில் 4,887 பேரும் காணப் படுகின்றனர். இந்த நபர்களில், முழுமையாக இயலா மைக்குட்பட்டோராக இல்லங்களில் பராமரிப்புச் செய்யப்
படுபவர்கள் கிழக்கு மாகாணத்தில் 8 பராமரிப்பு நிலை
யங்களில் 221 பேரும், வடக்கு மாகாணத்தில் 3 பராமரிப்பு நிலையங்களில் 193 பேரும் பரா மரிக்கப்பட்டு வருகின்றனர். இயலாமைக்குட்பட்டோரின் வெளிப்படையான தகவல் களுக்கிடையில், உட்கிடையாக இருகால்களை இழந்தவர்கள், இருகைகளை இழந்தவர்கள், முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தோர், வலிப்புநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பல்வேறு வகையான உப பாதிப்புகளுடன் கூடிய நபர்களும் காணப்படுகின்றனர். இவ்வகையினருக்கு ஏற்படும் பிரச்சினைகள் ஏனைய வகை மக்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளைவிட வேறுபட்டதும் சிக்கலானதுமாகக் காணப்படுகின்றன.
பராமரிப்பாளர்கள் இல்லாதநிலையில், காப்பகங்க ளில் தங்கியுள்ள முதியோர் எனப்பார்க்கும்பாது, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் 4 தனியார் நிர்வகிப்பு நிலையங்களில் 73 பேரும், மட்டக்களப்பில் 5 தனியார் நிர்வகிப்பு நிலையங்களில் 106 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 2 அரசநிலையங்களில் 40 பேருமாக, 219 பேர் காப்பகங்களில் பராமரிக்கப்படுகின்றனர். வடக்கு மாகா ணத்தின் யாழ்ப்பாணத்தில் 6 இல்லங்களில் 26 பேரும், கிளிநொச்சியில் 01 இல்லத்தில் 18 பேரும், மன்னாரில் 04 இல்லங்களில் 524 பேருமாக, 985 பேர் காப்பகங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் .(இந்த தகவல்கள் ஊடகங்களில் இருந்து பெறப்பட்டன)
போர் நிறைவடைந்து 17, வருடங்கள் கடந்தாலும் வடக்கு கிழக்கில் வறுமையும், நிரந்தர தொழில் இல்லா மையாலும், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தினமும் நூற்றுக் கணக்கானவர்கள் செல்வதை காணமுடிகிறது.
தற்போது என்றுமில்லாத வகையில் எரிபொருள் விலைஏற்றம் காரணமாக சகல அத்தியாவசிய பொருட் களுடைய விலைகள் அதிகரித்துள்ளன இதனால் சாதா ரண நடுத்தர குடும்பங்கள் மேலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான வாழ்வாதார சிக்கல்களுக்கும், பின்னடைவுகளுக்கும் அப்பால் இளைஞர்களிடையே போதைவஸ்த்து பாவனை, மதுபான பாவனைகளை திட்டமிட்டு ஊக்குவிக்கும் சதிகளும் வடகிழக்கில் தொடர் வதையும் தடுக்கமுடியாமல் உள்ளது. கடந்த 02/06/2026ல் போதைவஸ்த்துக்கு அடிமை யாகி மட்டக்களப்பு கல்லடி பொலிஸ்பயிற்சி நிலையத்தில் 14, நாட்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்ட 30, இளைஞர்கள் தமது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டனர்.
ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு மாகாணங்கள் தொடர்சியாக உள்நாட்டு போரினாலும், வறுமையினாலும், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளாலும் தொடர்ந்தும் பாதிப்பை எதிர்நோக்கும் மாகாணங்களாகவே காணப்படுகின்றன.