தையிட்டி விகாரையில் கைதான இரு இளைஞர்களும் நிபந்தனைகளுடன் விடுவிப்பு

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

அத்துடன் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பலாலி காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளது.

வெசாக் தினத்தினை முன்னிட்டு, தையிட்டி விகாரையில் நேற்றைய தினம் (30) வழிபாடுகள் நடைபெற்ற நிலையில், விகாரைக்கு சற்று தொலைவில் காணி உரிமையாளர்கள் போராட்டம் முன்னெடுத்தனர்.

இந்தநிலையில் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விகாரைக்குச் செல்வதாக கூறி விகாரைப் பகுதிக்கு சென்று அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

அதனை அவதானித்த காவல்துறையினர் இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியமையால், இருவரையும் கைது செய்து பலாலி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளுக்கு பின்னர் நேற்றிரவு இருவரையும் மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் காவல்துறையினர் முற்படுத்தியிருந்தனர்.

இந்தநிலையில் குறித்த இருவரையும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி மகிந்தன் கந்தசாமி நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.