வித்தியா கொலை வழக்கு: குற்றவாளியின் உடலைப் பெற உறவினர்கள் மறுப்பு

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொண்டவரின் சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ். போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்டது.

அவர் தன்னை தானே, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும், உடலில் எந்தவிதமான சந்தேகத்திற்குரிய காயங்களும் இல்லை என்றும் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன், தெரிவித்தார்.

இந்தநிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர், உறவினர்கள் சடலத்தை ஏற்க மறுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அரச செலவில் சடலத்தை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா, கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்த நிலையில், விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள், மற்றுமொரு குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் உள்ளிட்ட 09 பேரை கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பில், முன்னெடுக்கப்பட்ட துரித விசாரணைகளின் அடிப்படையில், வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் 2017 ஆம் ஆண்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதன்போது 09 எதிரிகளுக்கு எதிராக 41 குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

எனினும், 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி, இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முடியாதமையால் , குறித்த இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஏனைய ஏழு பேருக்கும் மரண தண்டனை விதித்தும் , 30 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்தும் தீர்பளிக்கப்பட்டது.

குறித்த தீர்ப்பினை ஆட்சேபனைக்கு உட்படுத்தி, உயர்நீதிமன்றில் மேன் முறையீடும் செய்யப்பட்டது.

எனினும், மரண தண்டனை கைதிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், கடந்த ஆறாம் திகதி, அவர்களுக்கான மரண தண்டனையை மீள உறுதி செய்தது.