இலங்கை மாத்திரம் இன்றி சர்வதேச நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அந்த வகையில் டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக டென்மார்க்கின் கிறின்சட் நகரில் உள்ள தேவாலயத்தில், 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தலும் திருப்பலிப் பிரார்த்தனையும் மிகவும் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அருட்தந்தை Bjarke Friis இனால் தோத்திரப் பாடல்கள் பாடப்பட்டு திருப்பலி கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து விசேடமாக தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு அருட்தந்தை முதன்மைச் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் நீதிக்கு மாறாக இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு மலர் வணக்கம் மற்றும் சுடர் வணக்கமும் பொதுமக்களால் செலுத்தப்பட்டதோடு நினைவேந்தல் உரையும் இடம்பெற்றது.
நினைவேந்தல் நிகழ்வின் நிறைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியின் சிறப்பை எடுத்துரைத்து வருகை தந்தவர்களுக்கு கஞ்சி பரிமாறப்பட்டது.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
சென்னை – பெசன்ட் நகர் கடற்கரையில் மே-17 இயக்கத்தின் சார்பில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருமுருகன் காந்தியின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் சீர்காழியின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் இரா.செந்தில்செல்வன் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.
தமிழினத்தின் துயரத்தை நினைவுகூர்ந்து, நீதிக்கான பயணத்தில் என்றும் இணைந்திருப்போம் என்ற உறுதியுடன் நிகழ்வு நடைபெற்றது.



