முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் தயார்….

02. தமிழின அழிப்பு நாளான மே 18ஆம் திகதியை நினைவு கூரும் வகையிலான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம்  இன்றைய தினம் (18) நினைவு கூரப்படவுள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் ஆறாம்  நேற்று  (17) தமிழர் தாயகத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்படி, தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த வட்டுக்கோட்டை – பொன்னாலையில் நேற்று (17) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இனப்படுகொலை நினைவுச் சின்னத்துக்கு முன்பாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அக வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியானது சமைக்கப்பட்டு, உணர்வு ரீதியாக வழங்கப்பட்டது.

இதேவேளை, பரந்தாமன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு – கற்சிலை மடுவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஈகை சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலர்தூவி உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சியும் சமைத்து வழங்கப்பட்டது.

அதேநேரம், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாளான நேற்று (17) மன்னாரில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் ஈழப்போரின் வலி சுமந்த நாட்களின் நினைவு நிகழ்வும் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் பிரதான பேருந்து நிலையத்தின் நுழைவாயில் பகுதியில்    இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.

இதன்போது முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் உட்பட வீதியில் சென்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழரசுக்கட்சியின் வவுனியா கிளை அலுவலகம் முன்பாக நேற்று (17) இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது தமிழினப் படுகொலையை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இதேவேளை, 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப்படுகொலையின் போது கொல்லப்பட்டோரை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் சிவன் கோயிலடியில் நேற்று (17) குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு அகவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதேவேளை இன்று (18) மாலை வரை திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இன்று முள்ளிவாய்கால் முற்றத்தில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலையிலிருந்து செல்வோருக்கான விசேட பேருந்து சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.