அரசியல் மயமான மே தின மேடைகள் ‘மறக்கப்பட்ட உழைக்கும் வர்க்கம்’  : விதுரன்

இலங்கையில் நடைபெற்று நிறைவடைந்திருக்கும் சர்வதேச தொழிலாளர் தினம் தொழிலாளர்களின் வியர்வையையும் உரிமைகளையும் கொண்டாடும் நாளாக அமைவதற்குப் பதிலாக, அரசியல் அதிகாரப் போட்டிகளுக்கான போர்க்களமாகவும், ஒருவரையொருவர் வசைபாடும் மேடையாகவும் மாறியிருந்ததை நுணுக்கமாக அவதானிக்க முடிகிறது.
இம்முறை மேதின நிகழ்வுகளில் முன்வைக்கப்பட்ட பிரகடனங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் உரை களை ஆழமாகப் பகுப்பாய்வு செய்யும்போது, அவை உழைக்கும் வர்க்கத்தின் அடிப்படைத் தேவைகளை விடவும், வரப்போகும் தேர்தல்களையும், கட்சிப்பிளவுகளையும், ஆட்சித் தகைமைகளையுமே மையப்படுத்தியிருந்தன என் பது புலனாகிறது.
பிரதான அரசியல் நீரோட்டத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தொழிலாளர் தினத்தை தமது பலத்தைக் காட்டும் கருவியாகவே பயன்படுத்தின. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையி லான தேசிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, என்று அனைத்துமே மேதினத்தை ஒரு ‘முன்கூட்டிய தேர்தல் பிரசார மேடையாகவே’ கையாண்டன.
ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிதறிக்கிடக்கும் ராஜபக்ஷக்களின் ஆதரவுத் தளங் கள் ஆட்களை சேர்த்து பிரசாரம் செய்ய முடியாத கையறு நிலையை உணர்ந்து பௌர்ணமி தினத்தை பயன்படுத்தி தம்மை பக்திமிக்க பௌத்தர்களாக காண்பித்து விட்டனர்.
தொழிலாளர்களின் எட்டு மணிநேர வேலை, ஊழியர் சேமலாப நிதிப் பாதுகாப்பு போன்ற விடயங்கள் பெயரளவில் பேசப்பட்டாலும், உரைகளின் பெரும்பகுதி ஊழல் குற்றச்சாட்டுகள், சிறைவாசம் பற்றிய எச்சரிக்கைகள் மற்றும் மாகாண சபைத்தேர்தல் சவால்களாலேயே நிரப் பப்பட்டிருந்தன.
தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உரை, உழைக்கும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டவரைபாக இருப்பதை விடவும், கடந்த கால ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகவே அமைந்தது.
‘இந்த ஆண்டு பலர் சிறை செல்வார்கள்’ என்றும், ராஜபக்ஷகளின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும் என்றும் அவர் விடுத்த முழக்கங்கள், மக்கள் மத்தியில் ஒருவிதமான ‘நீதி வழங்கும்’ எதிர்பார்ப்பைத் தூண்டினாலும், அது மேதினத்தின் உண்மையான தத்துவத்திலிருந்து வில கிச் சென்றதைக் காட்டுகிறது.
குறிப்பாக, ‘தித்வா’ புயல் மற்றும் சர்வதேசப் பொரு ளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியில் 60 ஆயிரம் கோடி ரூபா நிவாரணம் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், நாளாந்தம் விலைவாசி உயர்வால் நசுக்கப்படும் தொழிலாளிக்கு நிலையான பொருளாதாரத் தீர்வு எங்கே என்ற கேள்விக்கு அங்கு தெளிவான பதில் இருக்கவில்லை.
மேலும், 21 இடங்களில் மேதினக் கூட்டங்களை நடத்தி ஆளும் தரப்பு தனது உட்கட்சி அதிருப்திகளை மௌனிக்கச் செய்யவே இவ்வாறான தந்திரோபாயங்களைக் கையாண்டுள்ளது என்ற யதார்த்தத்தையும் தவிர்க்க முடி யாததாக உள்ளது.
மறுபுறம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வின் உரை, அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட சவால்களுடான மேடையாகவே அமைந்தது. மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அவர் விடுத்த பகிரங்க சவாலும், அடுத்த மேதினத்தை முதலமைச்சர்களுடன் கொண்டாடுவோம் என்ற கருத்தும், தொழிலாளர் நலனை விடவும் ‘அதிகாரக் கைப்பற்றல்’ மீதே அவரது கவனம் இருப்பதை உறுதி செய்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுடனான ‘ஒற்றுமை’ குறித்த பேச்சுகள், கொள்கை அடிப்படையிலான இணைவை விடவும், தேசிய மக்கள் சக்தியை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பவாத அரசியலாகவே விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. தொழி லாளர் உரிமைகள் பறிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டி னாலும், அதற்கான மாற்றுப் பொருளாதாரக் கொள்கை என்ன என்பதை விளக்குவதை விட, அரசாங்கத்தின் ‘பொய் யர்களை’ அம்பலப்படுத்துவதிலேயே அவர் அதிக நேரம் செலவிட்டிருக்கின்றார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மே தினப் பிரகட னங்கள் தென்னிலங்கை அரசியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டவொரு தளத்தில் இயங்கின. கிளிநொச்சியில் சிவஞானம் சிறிதரன் மற்றும் மாங்குளத்தில் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் ஆற்றிய உரைகள், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளையும் ‘சுயநிர்ணய’ உரிமையையும் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொன்னன.
‘யாமார்க்கும் குடியல்லோம்’ என்ற முழக்கம், சிங்களப் பேரினவாத மேலாதிக்கத்திற்கு எதிரான தார்மீகக் குரலாக ஒலித்தாலும், வடகிழக்கு தொழிலாளர்களின் – குறிப்பாக மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் – அன்றாட வாழ்வாதாரப் போராட்டங்கள் அரசியல் கோசங்களுக்குள் அமிழ்ந்து போயின.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, காணி அபகரிப்பு போன்ற நீண்டகால அரசியல் கோரிக்கைகள் மேதினப் பிரகட னத்தில் முதன்மை பெற்றன. அதேநேரம், தென்னிலங்கை இடதுசாரித் தலைவர் கள் வடகிழக்கு மக்களின் நம்பிக்கையைச் சிதைத்து வருவதாக சுமந்திரன் முன்வைத்த விமர்சனம், இலங்கை அரசியலில் இன ரீதியான துருவமுனைப்பு இன்னும் தீவிரமாகவே இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
13ஆவது திருத்தத்தை நிராகரிப்பதும், சர்வதேச விசாரணையைக் கோருவதும் நியாயமானது என்றாலும் தொழிலாளர் தினத்தின் உலகளாவிய வர்க்கப் போராட்ட சிந்தனையோடு எவ்வாறு இணையும் என்பது பெருங்கேள் குரிய விடயமாகும்.  இதற்குள் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, விஜேதாச ராஜபக்ஷ தலைமையில் தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடுவதை பொரளைக் கூட்டத்தில் காண முடிந்தது.
‘கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது’ என்ற தற்காப்பு உரைகள், கட்சியின் உட்கட்சிப் பூசல்களையும் பிளவுகளையும் மூடிமறைக்கும் முயற்சியாகவே தெரிந்தன.
திறைசேரியில் பணம் காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் 18 மாதங்களில் ஒரு இலட்சம் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாகச் சொல்லப்படும் தரவு கள் பாரதூரமானவை என்றாலும், அவற்றை அரசியல் கருவியாகப் பயன்படுத்துவதைத் தாண்டி, அத்தொழிலாளர் களுக்கு அந்தக் கட்சி வழங்கப்போகும் பாதுகாப்பு என்ன என்ற கேள்விக்கு பதிலே இல்லை.
அனைத்துக் கட்சிகளின் உரைகளிலும் பொதுவா கக் காணப்பட்ட ஒரு அம்சம் ஊழலாகும். நிலக்கரி ஊழல், மாயமான நிதி, அரசியல்வாதிகளின் சொத்து விபரங்களை வெளிப்படுத்தல் என்று ஊழலை மையப்படுத்தியே 2026 மேதினம் நகர்ந்தது.  இதுவொரு ஆரோக்கியமான போக்காகத் தெரி ந்தாலும், உண்மையில் தொழிலாளியின் சம்பள உயர்வு, தொழிற்சங்க உரிமைகள், வேலைத்தளப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு என்பன இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன.
முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ குறிப்பிட்டது போல, புதிய அரசாங்கம் ‘நவதாரா ளவாதத்திற்குப் பழகிப்போய்’ சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து செயற்படுவதால், 2028இல் நாடு பாரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என்ற எச்சரிக்கை கவனிக்கத்தக்கது.  ஆனால், இவ்வாறான கொள்கை ரீதியான விமர்சனங்கள் பிரதான ஊடகங்களிலும் பெரிய மேடை களிலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வில்லை. அதுமட்டுமன்றி அவர்களும் ஆளும் தரப்பிற்கு மாற்று அணியாக தங்களை காண்பிக்கவே முயன்றிருந்தனர்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், 2026 மே தினம் என்பது இலங்கையில் ஒரு ‘அரசியல் கண்காட்சியாகவே’ நிகழ்ந்தேறியிருக்கிறது. தொழிலாளர்கள் தமது உரிமை களுக்காகத் திரளுவதற்குப் பதிலாக, தத்தமது அரசியல் தலைவர்களின் ‘சக்திப் பிரயோகங்களுக்கு’ பின்னணி யாகவே பயன்படுத்தப்பட்டனர்.
தேர்தல் வாக்குறுதிகள், ஒருவரையொருவர் சிறைக்கு அனுப்புவோம் என்ற சவால்கள், இன ரீதியான துருவமுனைப்புகள் மற்றும் அதிகாரப் பசி என்பன உழைக் கும் வர்க்கத்தின் உண்மையான வலிகளை மறைத்து விட் டன.
மேதினத்தின் அடிப்படை நோக்கமான ‘தொழி லாளர் வர்க்க ஒற்றுமை’ என்பது சிதைக்கப்பட்டு, கட்சி ரீதியாகவும், இன ரீதியாகவும் தொழிலாளர்கள் பிரிக்கப் பட்டிருப்பது இலங்கையின் எதிர்காலத் தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு ஆரோக்கியமானதல்ல.  ஆட்சியாளர்கள் மாறினாலும், உழைக்கும் மக்க ளின் பிரச்சினைகள் ‘குழுக்கள்’ மற்றும் ‘ஆணைக்குழுக் களுக்குள்’ முடக்கப்படுவது இந்த மேதினத்திலும் கசப்பான உண்மையாகவே நீடிக்கிறது.