முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்றைய தினம் (12) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுஷ்டிக்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தலைமையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வை.தினேஸ் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நினைவேந்தல் வார நிகழ்வுகள் ஆரம்பமாயின.
இதன்போது முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவாக வழங்கப்படுகின்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன்,
“எங்கே எங்கே எமது உறவுகள்” என்ற கேள்வியும், “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” என்ற கோசமும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், உள்நாட்டுப் பொறிமுறை மூலமாக எங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்பட்ட விடயம் 17 ஆண்டுகளில் பொய்யாகத்தான் முடிந்திருக்கிறது. அது இன்னும் நடைபெறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆகவே பன்னாட்டுப் பொறிமுறை என்று சொல்லப்படுகிற சர்வதேச பொறிமுறையின் ஊடாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்குரிய நீதி கிடைக்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுர்த்தி சிறிநேசன் தெரிவித்தார்.



