கடந்த ஆண்டு தாக்கிய மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான ‘டித்வா’ சூறாவளியைத் தொடர்ந்து, இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் புனரமைப்புத் திட்டத்தை விரைவாகச் செயற்படுத்துவதற்கு இரு நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தொழில் அமைச்சர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவைச் சந்தித்தபோதே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ‘450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தித்வாவுக்குப் பின்னரான நிவாரணப் பொதியை விரைவாகச் செயற்படுத்த இணக்கம் காணப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி நாட்டைத் தாக்கிய டித்வா சூறாவளியினால் 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதோடு, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளினால் 640க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அனர்த்தம் ஏற்பட்டவுடன் முதற்கட்டமாக உதவிக்கரம் நீட்டிய இந்தியா, இலங்கைக்கு நிவாரணம், மீட்பு உதவிகள் மற்றும் உட்கட்டமைப்பு தொடர்புகளைச் சீரமைப்பதற்காக நவம்பர் 28ஆம் திகதி ‘ஒபரேஷன் சாகர் பந்து’ திட்டத்தை ஆரம்பித்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கையின் சிரேஷ்ட தலைவர்களைச் சந்தித்து, சூறாவளிக்கு பின்னரான இலங்கையின் மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை உறுதிப்படுத்தியதுடன் 450 மில்லியன் டொலர்கள் நிவாரண உதவியை அறிவித்திருந்தார்.
இந்த நிவாரணப் பொதியில் 350 மில்லியன் டொலர் சலுகை அடிப்படையிலான கடன் திட்டமாகவும், 100 மில்லியன் டொலர் நன்கொடையாகவும் வழங்கப்பட்டிருந்தது.
அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோவுடனான இச்சந்திப்பின் போது, தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஏனைய இருதரப்புத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் உயர்ஸ்தானிகர் ஜா விளக்கமளித்துள்ளார்.
வீடமைப்பு, சுகாதாரம், நீர் வழங்கல், உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியத் திட்டங்கள் தற்போது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், நவீன நிதிச் சட்டங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு ஆகிய துறைகளில் சாத்தியமான ஒத்துழைப்புகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்துள்ளார்.



