2.5மில்லியன் டொலர்கள் மோசடி: திறைசேரியைச் சூழந்து நிற்கும் மர்ம மேகங்கள் :விதுரன்

இலங்கையின் நிதி நிர்வாக வரலாற்றில் மற்றுமொரு கரும்புள்ளியாக, திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்திலிருந்து (ERD) அவுஸ்திரேலியாவிற்குச் செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, சூட்சுமமான முறையில் மூன்றாம் தரப்பு கணக்கிற்குத் திசைதிருப்பப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இது வெறுமனே தொழில்நுட்பக் கோளாறு அல்லது ‘ஹக்கிங்’ என்பதற்கு அப்பால், நாட்டின் நிதி இறை யாண்மை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பில் நிலவும் பாரிய ஓட்டைகளையும், அதிகார மட்டத்திலான பொறுப்பற்ற தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த மோசடியின் பின்னணியில் உள்ள தொழில் நுட்பக் கையாடல் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். 2026 ஜனவரியில் அவுஸ்திரேலியக் கடன் தவணையைச் செலுத்தும் போது, மின்னஞ்சல் ஊடாக வந்த போலி வங்கி விபரங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த நிதி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக, ஒரு சர்வதேசக் கடன் தவணையைச் செலுத்தும் போது, 13 உயர்மட்ட அதிகாரிகள் அந்த ஆவணங் களைச் சரிபார்த்து கையெழுத்திட வேண்டும் என்ற விதி முறை இலங்கையில் பின்பற்றப்பட்டு வரும் மரபு ரீதியான முறைமையாக இருக்கின்றது.
ஆனால் அத்தனை அதிகாரிகளின் கைகளைக் கடந்து செல்லும் ஆவணத்தில், வங்கிக் கணக்கு இலக்கம் மாற்றப்பட்டிருப்பதை ஒருவர்கூடக் கண்டறியவில்லை என்பது நம்பகத்தன்மையற்றது. அதுமட்டுமன்றி, மின்னஞ்சல் மூலம் வந்த புதிய கணக்கு விபரங்களை உறுதிப்படுத்த, அதிகாரிகள் உண்மை யான கடன் ஒப்பந்தத்தில் உள்ள தொலைபேசி எண்களைப் பயன்படுத்தாமல், மோசடிக்காரர்கள் மின்னஞ்சலில் வழங்கியிருந்த போலி எண்ணுக்கே அழைத்து உறுதிப்படுத் தியுள்ளமையும் வேடிக்கையானது.
இதுவொரு தற்செயலான பிழையா அல்லது உள்ளக அதிகாரிகள் யாராவது திட்டமிட்டு இந்த மோசடிக் குத் துணை போயுள்ளனரா என்ற சந்தேகத்தை இப்போது வலுவடையச் செய்துள்ளது. ஒரு சர்வதேச கொடுக்கல் வாங்கலில், ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட வங்கிக் கணக்கு களைத் தவிர்த்து புதிய கணக்குகளுக்குப் பணத்தை அனுப்பும் போது பின்பற்ற வேண்டிய அடிப்படை ‘சரிபார்ப்பு’ (Verification) நடைமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள் ளன.
இவ்வாறான சம்பவங்கள் உலக நாடுகளில் நடை பெறாமல் இல்லை.. 2016 ஆம் ஆண்டு பங்களாதேஷ் மத்திய வங்கியில் 81 மில்லியன் டொலர் கொள்ளை நடைபெற்றுள் ளது. அங்கேயும் வடகொரியாவின் ‘லாசரஸ்’ (Lazarus) போன்ற நுணுக்கமான ஹக்கிங் குழுக்கள் ஊடுருவி கொள்ளையை கன கச்சிதமாக நிகழ்த்தியிருந்தன. ஆனால், அங்குள்ள அதிகாரிகள் தவறை உணர்ந்தவுடன் உலகளா விய ரீதியில் எச்சரிக்கையும் விடுத்தனர்.
திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமா வின் கூற்றுப்படி, ஜனவரியிலேயே இந்தியாவிற்கான கடன் கொடுப்பனவின் போதும் இத்தகைய மோசடி முயற்சி நடந்துள்ளமை உறுதிப்படுத்தப்படுகின்றது.
இந்தியக் கடன் கொடுப்பனவில் அச்சுறுத்தலை உணர்ந்த நிதி நிர்வாகம், ஏனைய அனைத்து வெளிநாட்டுப் பரிமாற்றங்களையும் உடனடியாகச் சரிபார்த்திருக்க வேண்டும். ஆனால், அவுஸ்திரேலியாவிற்குப் பணம் சென்றடையவில்லை என்ற தகவல் ஏப்ரல் மாதம் மீளவும் தெரிவிக்கப்படும் வரை திறைசேரி மௌனம் காத்தமை, அவர்களின் கண்காணிப்பு முறையில் உள்ள பாரிய பல வீனத்தைக் வெளிப்படுத்தியுள்ளது.
இதுவொரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் (Isolated Incident) அல்ல, மாறாக இதுவொரு தொடர் முயற்சியின் வெற்றிகரமான தாக்குதல் (Persistent Threat) என்பதை இன்னமும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லையென்பது துரதிஷ்டவசமானதாகும்.
இந்நிலையில், வெளிநாட்டு வளங்கள் திணைக் களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷவின் மரணம் விசாரணைகளின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது. மோசடி தொடர்பாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐந்து அதிகாரிகளில் ஒருவரான இவர், தனது வீட்டின் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
பிரேதப் பரிசோதனையில் அவரது மரணம் தற் கொலை எனத் தீர்மானிக்கப்பட்டாலும், பாரிய நிதி மோசடி விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது, அதனுடன் தொடர்புடைய முக்கிய அதிகாரி இவ்வாறு உயிரிழப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
அவர் மீதான நிர்வாக அழுத்தங்கள் காரணமாக இது நடந்ததா அல்லது அவர் ஏதாவது உண்மைகளை வெளிப்படுத்தத் தயாராக இருந்தாரா? அதற்காகவே அவரது மரணம் உண்மைகளை மூடிமறைப்பதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவரிடம் பலமுறை வாக்குமூலங்களைப் பெற்று, அவரது டிஜிட்டல் சாதனங்களைக் கையேற்ற நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. இத்தகைய மரணங்கள் உண்மையான குற்ற வாளிகளைக் காப்பாற்றுவதற்கான ‘தியாகமாக’ அமைந்து விடக் கூடாது என்பதில் மிக முக்கிய கவனம் தேவையாக உள்ளது.
இலங்கைச் சட்டத்தின்படி, தற்கொலைக்குத் தூண்டுதல் (Abetment of Suicide) என்பது நிரூபிக்கப்பட வேண்டிய கடினமான விடயமாகும். இந்த அதிகாரி தற் கொலை செய்துகொண்டார் எனில், விசாரணை என்ற பெயரில் அவர் மீது பிரயோகிக்கப்பட்ட உளவியல் அழுத்தங் கள் எத்தகையவை என்பது ஆராயப்பட வேண்டும்.
ஒரு அதிகாரி தவறு செய்திருப்பின் அவருக்கு சட்டப்படியான தண்டனை வழங்கப்பட வேண்டுமே தவிர, அவர் உயிரிழக்கும் நிலைக்குத் தள்ளப்படுவது முறையான நீதியல்ல என்பது இயற்கை நியதியாகும்.
மறுபுறம், நிதி மோசடி தொடர்பான சட்டங்களில், தொழில்நுட்பக் குற்றங்களுக்கான தண்டனைகள் மற்றும் இழப்பீடுகளை அறவிடும் முறைகள் இலங்கையில் இன்ன மும் வலுவற்றதாகவே உள்ளன. அமைச்சர் ருவன் ரணசிங்க கூறியது போல, இழக்கப்பட்ட நிதியை அதிகாரிகளிடமிருந்து வசூலிப்போம் என்பது எந்தளவுக்குச் சாத்தியம்? ஒரு சாதாரண அரச அதிகாரியின் சொத்துக்கள் 2.5 மில்லியன் டொலர் இழப்பை ஈடு செய்யப் போதுமானதா? என்று பார்க்கையில் அவரது கூற்று அரசைக் காப்பாற்றுவதற்கான வெறும் அரசியல் கோசமாகும்.
அந்த வகையில், திறைசேரி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகிய இரு பிரதான நிதி நிறுவனங்களுக்கு இடையே நிலவும் அதிகாரப் போட்டி மற்றும் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் போக்குகள் இந்த மோசடிக்கான பொறுப்புக் கூறலை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
2026 ஜனவரியில் புதிய அரச கடன் முகாமைத்துவச் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னர், வெளிநாட்டு கடன் செலுத்தல்கள் அனைத்தும் இலங்கை மத்திய வங்கியின் கீழேயே இருந்தன. அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கான கடன் தவணைகள் 2025 செப்டம்பர் முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் செலுத்தப்பட்டவை எனில், அந்த மோசடிக்கு இலங்கை மத்திய வங்கியே முழுமையாகப் பொறுப்புக் கூற வேண்டும்.
ஆனால், தற்போது திறைசேரி அதிகாரிகள் மட்டும் தண்டிக்கப்பட்டு, மத்திய வங்கியின் ஆளுநர் அல்லது நாணயச் சபை உறுப்பினர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு அரச தரப்பில் பதிலளிப்பதற்கு யாருமில்லை.
நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகு மார திசாநாயக்க, இந்த இழப்புக்கள் மக்களின் தலையில் கட்டப்படாது எனக் கூறியிருந்தாலும், அரசாங்கம் எதனூடாக இந்த இழப்பை ஈடு செய்யும்? இறுதியில் மக்களின் வரிப்பணம் மற்றும் பொது நிதியே இதற்குப் பயன் படுத்தப்படும். அது மறைமுகமாக ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் சுமையாகவே இறங்கும் என்பதை தவிர்க்க முடியாது.
மேலும் திறைசேரி செயலாளராக ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்பட்ட போதே, அதுவொரு அரசியல் நியமனம் என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஒரு தேசத்தின் திறைசேரி என்பது அதன் முதுகெலும்பு. அங்கே நியமிக்கப்படுபவர்கள் அரசியல் விசுவாசத்தை விடவும், நிதி முகாமைத்துவத்தில் ஆழ்ந்த அனுபவமும், தொழில்நுட்ப அறிவும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க தனது நண்பரான அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநராக நியமித்ததால் ஏற்பட்ட பிணைமுறி மோசடி எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை மறக்கவில்லை. அதற்காக கோசம் எழுப்பியவர்கள் தான் ஆட்சியிலும் உள்ளார்கள். ஆனால் இதுவரையில் அந்த இழப்பை ஈடு செய்வதற்கு எந்த நடவடிக்கைகளையும் அவர்களால் எடுக்க முடிந்திருக்கவில்லை.
அவ்வாறான நிலையில் அநுர அரசாங்கம் இந்த மோசடியை வெறும் ‘ஹக்கிங்’ சம்பவமாகச் சித்தரிக்க முயலாமல், இதற்கான முறையான தடயவியல் ஆய்வை (Forensic Analysis) சர்வதேச நிறுவனங்களின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும். லாசரஸ் போன்ற குழுக்கள் ஊடுருவியிருந்தால், அவை மின்னஞ்சல் மட்டத்தில் மட்டும் நின்றிருக்காது. திணைக்களத்தின் உள்ளகக் கணினி கட்டமைப்பையே அவை மாற்றியமைத் திருக்க வாய்ப்புள்ளது. அதுபற்றிய சிந்தனைகள், தொழில் நுட்ப அறிவு அதிகாரிகளுக்கு காணப்படுகின்றதா என்பதே பெருங்கேள்வியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த மோசடியால் ஏற்பட்ட 2.5 மில்லியன் என்பது வெறும் பண இழப்பு அல்ல. இந்த தொகையானது பல நிபந்தனைகளை விதித்து சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய தவணைக்கடனுக்கு ஏறத்தாழ சமாந்தரமானது.
கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தரமற்ற சீன உரத்திற்காக 6 மில்லியன் டொலர்களைத் தாரை
வார்த்தது போன்றதொரு நிலையே  மீண்டும் ஏற்பட்டுள்ளது. அன்று சீன நிறுவனம் மிரட்டிப் பணத்தைப் பறித்தது, இன்று இணையவழியில் மர்மக் கும்பல் மின்னஞ்சல் மூலம் பணத்தைச் சுருட்டியுள்ளது. இரண்டிலும் பலிக்கடாக்களாக இருப்பது வரிப்பணம் செலுத்தும் சாதாரண பொதுமக்களே.
அரசாங்கம் இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளுடன் விசாரணை நின்றுவிடக் கூடாது. 21 பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறி காலத்தைக் கடத்திவிடக்கூடாது.
இந்த மோசடியின்  பின்னணியில் உள்ள ‘பெரிய தலைகள்’ யார்? இந்த நிதி எங்கே பரிமாற்றம் செய்யப் பட்டது? சர்வதேசப் பொலிஸாரின் உதவியின் விளைவு என்ன? மீளப்பெறுவதற்கான சாதக நிலைமைகள் எவ்வாறுள்ளன? போன்ற கேள்விகளுக்கு பொதுவெளியில் பதிலளிக்க வேண்டும்.
விசாரணைகள் நடைபெறுகின்றன. இரகசியத் தன்மை பேணப்பட வெண்டுமென அரச பொதுநிதிக்குழு வில் முன்னிலையாகிய திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும கூறுவதை தொடர்ச்சியாக ஆளும் தரப்பினரும் கூறி காலத்தைக் கடத்திக்கொண்டிருக்க முடியாது.
தற்போதைய நிலையிலேயே ‘மாற்றத்துக்காக’ வாக்களித்த மக்கள், மீண்டும் ‘ஏமாற்றத்தையே’ பரிசாகப் பெற்றுக்கொண்டுள்ளார்கள். அவ்வாறான நிலையில் நிகழ்ந்தேறியிருக்கும் மோசடி நாட்டின் நிதி இறையாண்மை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பின் மரண ஓலமாக இருக்கையில் மீள நிகழாமையை  உறுதிப்படுத்துவது யார் கைகளில் உள்ளது.