மே 18ஐ தமிழின அழிப்பு நாளாக நிறைவேற்றுமாறு புதிய தமிழக அரசிடம் கஜேந்திரகுமார் கோரிக்கை

சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் மே 18ஆம் திகதியை ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ தமிழ்நாடு சட்டசபையின் ஆரம்ப அமர்வில் நிறைவேற்றுமாறு தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளர்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று (10) தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஈழத் தமிழ் மக்களின் சார்பாகத் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

“நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பாரிய சாதனையை முதல் தடவையிலேயே நிலைநாட்டி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தாங்கள் பதவியேற்றுள்ளமையையிட்டு தமிழ்த் தேசிய பேரவையினராகிய நாம் மீளவும் எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.

“தமிழ் நாட்டின் ஆட்சியைப் பொறுப்பேற்று நிற்கும் தங்களுக்குள்ள பாரிய பணிச்சுமைகளுக்கு மத்தியில் எமது கோரிக்கையையும் கவனத்திற் கொள்ளுமாறு கேட்டு நிற்கின்றோம்”.

“சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை நினைவுகூரும் வகையில், கடந்த 2009ற்குப் பின்னர் ஆண்டுதோறும் மே 18 ஆம் திகதியை ‘முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நாளாக’ ஈழத்தமிழ் மக்கள் பிரகடனம் செய்து, அந்நாளில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரமாக ஒன்றுகூடி நினைவு கூர்ந்து வருகின்றார்கள்” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஈழத்தமிழ் மக்களது இந்த நீதிக்கான போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த அனைத்துக் கட்சிகளதும் ஆதரவுடன் ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது இனவழிப்பு என்றும், அதற்கு சர்வதேச குற்றவியல் விசாரணை அவசியம் என்றும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது”

“அந்நேரத்தில் தங்களது கட்சி நிறுவப்பட்டிருக்கவில்லை ஆயினும், அதன் பின்னர் தமிழக வெற்றிக்கழகம் தோற்றம் பெற்று, அதன் முதலாவது தேர்தலில் பெரு வெற்றியீட்டி தாங்கள் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளீர்கள்”.

“இந்நிலையில் தாங்களும் தங்களது தலைமையிலான தமிழ்நாடு அரசாங்கமும் ஈழத்தமிழர் மீது இடம்பெற்றது இனவழிப்பு. அதற்குச் சர்வதேச குற்றவியில் விசாரணை அவசியம். என்ற அதே நிலைப்பாட்டிலே மிகவும் இறுக்கமாகவும் உறுதியாகவும் பயணிப்பீர்கள் என்ற செய்தியை அனைத்துத் தரப்புகளுக்கும் வழங்கும் வகையில் செயற்பட வேண்டும்” என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார்.