இலங்கை திறைசேரியிலிருந்து அவுஸ்திரேலிய நிதி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட வேண்டிய 800 மில்லியன் ரூபாய் பணம் முறையற்ற விதத்தில் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
“மக்களின் வரிப்பணத்தில் 13 அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றுச் செல்லும் பணம், ஒரு வருடத்திற்கும் மேலாகியும் மீட்கப்படாமல் இருப்பது அரசாங்கத்தின் செயல்திறனை கேள்விக்குள்ளாக்கியுள்ளது” என்று அவர் சாடினார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவுஸ்திரேலிய நிறுவனத்திற்குச் சேர வேண்டிய 800 மில்லியன் ரூபாய் பணம் தவறான கணக்குகளுக்குப் பரிமாறப்பட்டுள்ளது.
ஒரு சிறிய கடை வைத்திருப்பவர் கூட கணக்கு விபரங்களைச் சரிபார்ப்பார், ஆனால் 13 உயர் அதிகாரிகள் சரிபார்த்தும் இந்தப் பணம் எப்படித் திருடப்பட்டது? இது திட்டமிட்ட ஊழலா? அல்லது அதிகாரிகளின் திறமையின்மையா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தற்போதைய திறைசேரி செயலாளர் ஒரு அரசியல் நியமனம் என்பதைச் சுட்டிக்காட்டிய சாணக்கியன், “தேசிய மக்கள் சக்தியில் பிரதி அமைச்சராக இருந்த ஒருவரை, அனுபவம் வாய்ந்த நிர்வாக சேவை அதிகாரிகளைப் புறக்கணித்துவிட்டு நியமித்ததன் விளைவே இது” என்றும் அவர் விமர்சித்தார்.
இவருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை இருப்பதாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றும் சாணக்கியன் வலியுறுத்தினார்.
2025 பெப்ரவரி மாதம் தபால் மூலம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் 6 இலட்சம் அமெரிக்க டொலர் பணம் காணாமல் போயுள்ளது.
ஓராண்டு கடந்தும் அந்தப் பணத்தைத் திரும்பப் பெற எந்த வழியும் இல்லை என்பது அரசாங்கத்தின் பலவீனத்தையே காட்டுகிறது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.



