ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு இன்னும் பெறப்படவில்லை என, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஜயிடம் தெரிவித்ததாக, ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர், தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜயை இன்று லோக் பவனுக்கு அழைத்தார். இந்த சந்திப்பின்போது, ஆட்சியமைப்பதற்கு அவசியமான, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேவைப்படும் பெரும்பான்மை ஆதரவு இன்னும் பெறப்படவில்லை என்று ஆளுநர் விளக்கினார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த சூழலில் திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாக தகவல் பரவியது. இந்தத் தகவலை திமுக தரப்பு உடனடியாக மறுத்துவிட்டது.
அரசியலில் இரு துருவங்களாக உள்ள இந்த இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாகப் பரவிய தகவல், உண்மையான முயற்சிகளை அறிந்து வெளியானதா அல்லது யூகங்களாக பரவியதா, வதந்தியாக பரப்பப்பட்டதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.



