நான்கு நாள் அரச பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரித்தானியாவின் மூன்றாம் சார்லஸ் மன்னர், நேற்று (28) அமெரிக்க காங்கிரஸ் சபையில் உரையாற்றினார்.
அங்கு உரையாற்றிய மூன்றாம் சார்லஸ் மன்னர் பின்வருமாறு தெரிவித்தார்:
“அமெரிக்காவுடனான அனைத்து விடயங்களிலும் சமத்துவம் நிலவும் வேளையில், மொழி நடை மாத்திரமே ஒரே மாற்றமாக இருக்க முடியும். நிச்சயமற்ற தன்மைகள் நிலவும் இக்காலகட்டத்தில், ஐரோப்பாவின் போர் மோதல்கள் மத்திய கிழக்கு வரை சர்வதேச சமூகத்திற்கு பாரிய சவாலாக மாறியுள்ளன. இதன் தாக்கம் அனைத்து நாடுகளிலும் ஏற்படும் என்பதை நாம் கூற வேண்டும்.”
அதனைத் தொடர்ந்து, சார்லஸ் மன்னர் மற்றும் கமீலா ராணி ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்து உபசாரத்தில் நேற்று கலந்துகொண்டனர். இதன்போது போர் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் கருத்து வெளியிட்டார்.
அங்கு கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்:
“நாங்கள் இப்போது மத்திய கிழக்கில் சில பணிகளை முன்னெடுத்து வருகிறோம், அவற்றை மிகச்சிறப்பாகச் செய்கிறோம். அந்த குறிப்பிட்ட எதிரியை இராணுவ ரீதியாக நாங்கள் தோற்கடித்துள்ளோம், அந்த எதிரிக்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். சார்லஸ் என்னுடன் இதில் இன்னும் அதிகமாக உடன்படுகிறார். அந்த எதிரிக்கு ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்க நாங்கள் இடமளிக்க மாட்டோம்” என்றார்.
இதேவேளை, இந்த விருந்துபசாரத்தின் போது மூன்றாம் சார்லஸ் மன்னர் ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு ஒரு பரிசினை வழங்கினார். இரண்டாம் உலகப் போரின் போது மிக முக்கிய பங்காற்றிய ‘HMS Trump’ எனும் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பலில் பொருத்தப்பட்டிருந்த மணியையே அவர் பரிசாக வழங்கினார்.
மேலும், “TWO KINGS” (இரு மன்னர்கள்) எனும் வாசகத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ஆகியோரின் புகைப்படத்தை வெள்ளை மாளிகை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளது.



